‘பல ஆண்டுகளாக சேவை புரிந்தவர்களை குற்றச்சாட்டுகளால் களங்கப்படுத்தாதீர்கள்’ தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நீதிபதிகள் கண்டிப்பு


‘பல ஆண்டுகளாக சேவை புரிந்தவர்களை குற்றச்சாட்டுகளால் களங்கப்படுத்தாதீர்கள்’ தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நீதிபதிகள் கண்டிப்பு
x
தினத்தந்தி 2 Feb 2018 10:15 PM GMT (Updated: 2 Feb 2018 6:14 PM GMT)

மருத்துவக்கல்வி இயக்குனர் நியமனம் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, “பல ஆண்டுகளாக சேவை புரிந்தவர்களை குற்றச்சாட்டுகளால் களங்கப்படுத்தாதீர்கள்“ என்று, ஐகோர்ட்டு நீதிபதிகள் கண்டித்தனர்.

மதுரை,

தமிழக மருத்துவ கல்வி இயக்குனராக டாக்டர் எட்வின்ஜோ கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து கரூர் மருத்துவக்கல்லூரி டீன் ரேவதிகயிலைராஜன் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், பணி மூப்பு அடிப்படையில் தனக்குத் தான் மருத்துவக்கல்வி இயக்குனர் பதவி வழங்கப்பட வேண்டும். எனவே எட்வின்ஜோ நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, எட்வின்ஜோ நியமனத்தை ரத்து செய்தும், உடனடியாக ரேவதி கயிலைராஜனை மருத்துவ கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும் என்றும் கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிவில், மருத்துவக்கல்வி இயக்குனர் நியமனம் தொடர்பான அரசாணையை ரத்து செய்த ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச், தனி நீதிபதியின் உத்தரவையும் ரத்து செய்தது. அத்துடன், அந்த பதவியில் தகுதியானவரை 6 வாரத்தில் பரிசீலித்து நியமிக்க உத்தரவிட்டது.

இதையடுத்து, ரேவதிகயிலைராஜன் தாக்கல் செய்த மனுவில், மருத்துவக்கல்வி இயக்குனர் பதவிக்கு தகுதியானவரை தேர்வு செய்து 6 வாரத்தில் நியமிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அந்த பதவி காலியாக இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. எனவே கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றத் தவறிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது மருத்துவக்கல்வி இயக்குனர் பதவிக்கு தகுதியானவர்கள் பட்டியல் அரசிடம் வழங்கப்பட்டு இருப்பதாகவும், 2 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்றும் அரசுத்தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், தாரணி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, தமிழக மருத்துவக்கல்வி இயக்குனராக எட்வின் ஜோவை நியமிக்க முடிவு செய்து இருப்பதாக தெரிவித்தார். உடனே, “எந்த அடிப்படையில் எட்வின்ஜோவை தேர்வு செய்தீர்கள்?“ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு வக்கீல், அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

அதைப் பார்த்த நீதிபதிகள், “எட்வின்ஜோவுக்கு சாதகமாக 9 அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் ரேவதிகயிலைராஜனுக்கு சாதகமாக ஒரு அம்சம் கூட இல்லையா?“ என்று மீண்டும் கேள்வி எழுப்பினர்.

அப்போது, மற்றொரு மனுதாரரான டாக்டர் மீனாட்சிசுந்தரத்தின் வக்கீல் ஆஜராகி, “2015-ம் ஆண்டு மருத்துவக்கல்வி இயக்குனர் பதவிக்கான தேர்வுப்பட்டியலில் டாக்டர் மீனாட்சிசுந்தரமும் இருந்தார். அப்போது அவருக்கு மெமோ அனுப்பப்பட்டது“ என்று வாதாடினார்.

உடனே, நீதிபதிகள் குறுக்கிட்டு, “தேர்வுப்பட்டியலில் பெயர் வந்தவுடன் மெமோ அனுப்ப காரணம் என்ன? பல ஆண்டுகள் சேவை புரிந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கவில்லை என்றாலும் பரவாயில்லை. குற்றச்சாட்டுகளால் அவர்களை களங்கப்படுத்தாதீர்கள்“ என்றனர்.

பின்னர் டாக்டர் ரேவதிகயிலைராஜன் தொடர்ந்த வழக்கில் இதுவரை தனிநீதிபதி, டிவிஷன் பெஞ்ச் ஆகியவை பிறப்பித்த உத்தரவுகளை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பின்னர் இந்த வழக்கை வருகிற 7-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். 

Next Story