பழனி அருகே 300 ஆண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள் கண்டுபிடிப்பு


பழனி அருகே 300 ஆண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 2 Feb 2018 4:15 AM IST (Updated: 2 Feb 2018 11:44 PM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே, 300 ஆண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் காவடியின் மகத்துவம் குறித்த பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

பழனி,

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கோதைமங்கலத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகள் யுவராணி. இவர் பழனி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறார். சம்பவத்தன்று இவர், தனது தந்தையுடன் சேர்ந்து வீட்டை சுத்தப்படுத்தி கொண்டிருந்தார். அப்போது வீட்டில் இருந்த பழமையான பெட்டி ஒன்றில் ஓலைச்சுவடிகள் இருந்தது. உடனே அந்த மாணவி தனது பள்ளி தமிழாசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான நந்திவர்மனுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து மாணவியின் வீட்டுக்கு சென்ற நந்திவர்மன் மற்றும் வரலாற்று ஆய்வாளர் ராஜேஸ்வரி ஆகியோர் அந்த ஓலைச்சுவடிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த ஓலைச்சுவடிகளில் இணைக்கப்பட்டுள்ள நூலின் ஒரு முனையில் ஆங்கிலேயர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பட்டன் இருப்பதை பார்த்தனர். உடனே அந்த பட்டனில் பொறிக்கப்பட்டிருக்கும் விவரங்களை சோதித்து பார்த்தனர். அப்போது அது 300 ஆண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் நந்திவர்மன் கூறியதாவது:-

கோதைமங்கலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஓலைச்சுவடிகள் ஒரு அடி நீளமும், 4 சென்டிமீட்டர் அகலமும் கொண்டதாகும். ஓலைச்சுவடியின் இருபக்கமும் முருகப்பெருமானை போற்றி காவடிசிந்து பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. மொத்தம் 50 ஓலைச்சுவடிகளில் 100 பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. பாடல்கள் அனைத்தும் எளிய தமிழ்நடையில் உள்ளன.

முதல் பாடலாக விநாயகரை போற்றியும், அடுத்து பத்துப்பாடல்களாக முருகப்பெருமானை போற்றியும், முருகப்பெருமானுக்கு காவடி எடுத்து வருவதால் ஏற்படும் நன்மைகள், காவடி எடுத்து பாதயாத்திரையாக வருவதால் குணமாகும் நோய்கள் குறித்த விவரங்கள் ஆகியவை பாடல்களாக எழுதப்பட்டுள்ளன.

அதேபோல் திருச்செந்தூர் முருகப்பெருமான் குறித்தும் பத்துப்பாடல்கள் இந்த ஓலைச்சுவடிகளில் உள்ளன. ஒவ்வொரு பாடலின் 2-வது வரியில் 3-வது சொல்லாக முருகப்பெருமானின் பல பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த சுவடியில் உள்ள பாடல்கள் இதுவரை அச்சில் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஓலைச்சுவடிகளில் உள்ள பாடல்கள் அனைத்தும் நூலாக மாற்றி வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஓலைச்சுவடி பழனி அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story