நியாயமாக போராடுவோர் மீது போலீசார் அத்துமீறுவதை தடுக்க வேண்டும் - சரத்குமார் வலியுறுத்தல்


நியாயமாக போராடுவோர் மீது போலீசார் அத்துமீறுவதை தடுக்க வேண்டும் - சரத்குமார் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 Feb 2018 4:15 AM IST (Updated: 2 Feb 2018 11:44 PM IST)
t-max-icont-min-icon

நியாயமாக போராடுவோர் மீது போலீசார் அத்துமீறி நடப்பதை தடுக்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறினார்.

ராஜபாளையம்,

ராஜபாளையத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் நாடார் மேல்நிலைப்பள்ளியின் 29-வது ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக கட்சியின் தலைவர் சரத்குமார் நேற்று வருகை தந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய பட்ஜெட் சாமானிய மக்களுக்கான பட்ஜெட் அல்ல. வருகிற நாடாளுமன்ற தேர்தலை நோக்கிய பட்ஜெட்டாக உள்ளது. மருத்துவ காப்பீடு போன்ற அறிவிப்புகளை செயல்படுத்துவதில் சாத்தியக் கூறுகள் இருப்பதாக தெரியவில்லை. இதில் பல்வேறு குழப்பம் உள்ளது. விவசாயிகளுக்கான அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. ஆனால் அறிவிப்போடு இல்லாமல் நடைமுறைப்படுத்த வேண்டும். ஏனெனில் ஒரு நாட்டின் முதுகெலும்பு விவசாயிகள், வீட்டுக்கு ஒரு விவசாயி என்பது சமத்துவ மக்கள் கட்சியின் கொள்கை.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் போது மக்கள் மீது போலீசார் அத்து மீறி தாக்குவது உண்டு. இதில் அரசு கவனம் செலுத்தி நியாயத்திற்காக போராடுபவர்கள் மீது போலீசாரின் அத்து மீறலை தடுக்க வேண்டும். அரசியல் நாகரிகம் கருதி சீமானுடன் ஒன்றாக பேட்டி அளித்தேன். தமிழ் உணர்வுக்கு குரல் கொடுப்பதில் இருவரது கொள்கையும் ஒரே மாதிரியாக இருக்கும். ரஜினி, கமல் இருவரும் இன்னும் அரசியலுக்கு வரவில்லை.

டி.டி.வி. தினகரன் மக்களை சந்திப்பது நல்லதுதான். உள்ளாட்சி தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும். எங்களின் தனித்துவத்தை காட்டுவதற்காக கடந்த 10 ஆண்டு காலம் அ.தி.மு.க.வில் பயணித்து வந்தோம். மாநில அரசினை மத்திய அரசு இயக்குகிறது என்று பொதுவாக கூற முடியாது. மேலும் தமிழக அரசின் செயல்பாடுகள் மோசம் என்றும் கூற முடியாது. ஒரு வலிமையான தலைவியை இழந்து நிற்கிறது. தற்போது பல்வேறு குழப்பங்கள், பிரச்சினைக்கு மத்தியில் அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது.

விஷால் பற்றி பேச விரும்பவில்லை. ஏனெனில் 10 ஆண்டுகள் அரசியலில் உள்ளவர்களுக்கும், 6 மாதத்துக்கு முன்பு வந்தவர்களுக்கும் வித்தியாசம் உண்டு இவ்வாறு கூறினார். அப்போது துணைப் பொதுச் செயலாளர்கள் சுந்தர், ஈஸ்வரன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் விவேகானந்தன், மாவட்ட செயலாளர் லலித் குமார்ராஜா, நகரச் செயலாளர் லட்சுமணன், ஒன்றியச் செயலாளர் கோசிமணி, சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story