நாடுமுழுவதும் பல இடங்களில் ரூ.100 கோடி கொள்ளை; ஏ.டி.எம். கொள்ளை கும்பல் தலைவன் குறித்து திடுக்கிடும் தகவல்கள்


நாடுமுழுவதும் பல இடங்களில் ரூ.100 கோடி கொள்ளை; ஏ.டி.எம். கொள்ளை கும்பல் தலைவன் குறித்து திடுக்கிடும் தகவல்கள்
x
தினத்தந்தி 3 Feb 2018 3:45 AM IST (Updated: 3 Feb 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

ஏ.டி.எம். கொள்ளை கும்பல் தலைவன் நாடு முழுவதும் ரூ.100 கோடி கொள்ளையடித்து சொகுசுவாழ்க்கை வாழ்ந்து உள்ளார்.

கோவை,

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் உள்ள 2 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்த வடமாநிலத்தை சேர்ந்த மோஷம்கான், அமீன், சுல்பிஹீர், அமித்குமார், சுபேர், முபாரக், முஸ்தாக், மற்றொரு சுபேர் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கோடிக்கணக்கான ரூபாயை கொள்ளையடித்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 8 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். இந்த கும்பலுக்கு அரியானா மாநிலத்தை சேர்ந்த இஸ்லாமுதீன் (43) என்பவர் தலைவனாக செயல்பட்டு வந்ததும், கொள்ளை நடந்ததும், பணத்துடன் இஸ்லாமுதீன் தனது காதலி கிரணுடன் தப்பிச்சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள காதலி கிரணின் வீட்டிற்கு இஸ்லாமுதீன் வருவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று, அந்த வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் இஸ்லாமுதீனை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் தனிப்படை போலீசார் அவரை விமானம் மூலம் கோவை கொண்டு வர முடிவு செய்தனர். இதையடுத்து ஜெய்ப்பூரில் இருந்து இஸ்லாமுதீன் விமானம் மூலம் பெங்களூரு கொண்டு வரப்பட்டார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் போலீசார் அவரை கோவை அழைத்து வந்தனர். பின்னர் அவரை கோவையில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அவரிடம் நடத்திய விசாரணையில் வெளியான தகவல்கள் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

இஸ்லாமுதீன் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். கடந்த 17 ஆண்டுகளாக குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2001-ம் ஆண்டில் முதன் முதலாக பணத்துக்காக ஒருவரை கடத்தி கொலை செய்துள்ளார். அதன் பின்னர் தொடர்ந்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டில் முதன் முதலாக தமிழகத்தில் திருட்டு தொழிலில் இறங்கினார். திண்டுக்கல்லில் ரூ.75 லட்சம் மதிப்பிலான செம்பு ஒயரை ஏற்றிச்சென்ற லாரியை கடத்திச்சென்றார்.

அதன் பின்னர் தொடர்ந்து தமிழகத்திலும் பல திருட்டு தொழிலில் ஈடுபட்டார். திருட்டு தொழிலில் ஈடுபடுவது பிடிக்கவில்லை என்பதால் ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளையடிப்பதில் இறங்கினார். அதைத்தொடர்ந்து கடந்த 7 ஆண்டுகளாக ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளையடித்து வருகிறார்.

இவர் இந்த கொள்ளையில் ஈடுபடுவதற்காக ஊருக்கு ஊர் நூற்றுக்கணக்கான அடியாட்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும், யாருக்கும் தெரியாமல் ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து பணத்தை கொள்ளையடிப்பதில் கைதேர்ந்தவர்கள். அதிலும் சிலர் ஏ.டி.எம். மையத்துக்குள் சென்றதும் 15 நிமிடங்களில் அந்த எந்திரத்தை சத்தம் இல்லாமல் உடைத்து பணத்தை கொள்ளையடித்து விடுவார்கள்.

கடந்த 2005-ம் ஆண்டில் டெல்லியில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அரியானாவில் நடந்த பல திருட்டு வழக்கிலும் போலீசார் அவரை கைது செய்தனர். இதன் காரணமாக அந்தப்பகுதியில் எவ்வித குற்ற சம்பவங்களும் செய்யாமல் தென்மாநிலங்களை அவர் தேர்வு செய்தார்.

குறிப்பாக மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா, தமிழகம் உள்பட பல பகுதிகளை தேர்வு செய்து, கடந்த 7 ஆண்டாக ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளையடித்து உள்ளார். இதுவரை இஸ்லாமுதீன் கொள்ளையடித்தது, திருடிய பொருட்களின் மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும்.இதில் அவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.

இவரின் தந்தை அரசியல்வாதி என்பதால், அவர் மூலம் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்று, போலீசாரிடம் இருந்து தப்பித்துக்கொண்டே இருந்துள்ளார். முதன் முதலாக சிறைக்கு சென்றபோது, அங்கு இருந்த பெரிய குற்றவாளிகளிடம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு, வெளியே வந்ததும், தனது திட்டத்தை நிறைவேற்றி உள்ளார். இவ்வாறு நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களில் 70 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து பலகோடி ரூபாயை கொள்ளையடித்துள்ளார்.

மனைவி குழந்தைகள் இருந்தாலும், கிரண் என்ற காதலியை வைத்துக்கொண்டதுடன், அவருக்கு ஜெய்ப்பூரில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பங்களா வாங்கி கொடுத்துள்ளார். அந்த பங்களாவுக்கு வாரத்துக்கு ஒருமுறை சென்றும் இருக்கிறார். ஒரு இடத்தில் கொள்ளையடித்த பின்னர் அந்த கும்பலில் இருப்பவர்கள் அனைவரும் வெவ்வேறு பகுதிக்கு சென்று விடுவார்கள். மாதம் ஒருமுறை ஒரு நட்சத்திர ஓட்டலில் கூடி, அடுத்த திட்டம் குறித்து ஆலோசனை செய்வதுடன், அந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பயிற்சியும் கொடுத்துள்ளார்.

பெரும்பாலும் ஒரு இடத்தில் கொள்ளையடிக்க இஸ்லாமுதீன் விமானத்தில்தான் செல்வார். அங்கு கொள்ளையடித்துவிட்டு தனியார் சொகுசு பஸ்சில் ஜெய்ப்பூருக்கு சென்றுவிடுவார் என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து ஒரு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். 

Next Story