கூடலூரில் டிசம்பர் மாதத்தை போல் பிப்ரவரி மாதத்திலும் கடும் பனிப்பொழிவு, பொதுமக்கள் அவதி


கூடலூரில் டிசம்பர் மாதத்தை போல் பிப்ரவரி மாதத்திலும் கடும் பனிப்பொழிவு, பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 2 Feb 2018 9:30 PM GMT (Updated: 2 Feb 2018 7:14 PM GMT)

கூடலூரில் சீதோஷ்ண நிலை மாறியதால் டிசம்பர் மாதத்தை போல் பிப்ரவரி மாதத்திலும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர்.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் ஜூன் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை பெய்வது வழக்கம். இந்த காலக்கட்டத்தில் பாண்டியாறு, மாயார், ஓவேலி, பொன்னானி, சோலாடி, முதுமலை கக்கநல்லா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். மேலும் பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும். விவசாய பணிகளும் தங்கு தடையின்றி நடைபெறும். டிசம்பர் மாதத்தில் பனிப்பொழிவு காணப்படும். அதன் தாக்கம் ஜனவரி 15-ந் தேதி வரை இருக்கும். அதன்பின்னர் பனிக்காலம் நிறைவு பெற்று கோடை காலம் கூடலூர் பகுதியில் தொடங்கி விடும்.

இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கூடலூர் பகுதியில் பனிப்பொழிவின் தாக்கம் குறையும் என பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் வழக்கத்துக்கு மாறாக டிசம்பர் மாதம் போல் இந்த பிப்ரவரி மாதத்திலும் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது.

காலை 11 மணி வரை பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் காலையில் எழுந்து வேலைக்கு செல்லும் பொதுமக்களும், பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் குளிரில் நடுங்கியப்படியே பஸ் நிலையங்களில் பஸ்சுக்காக காத்திருப்பதை பார்க்க முடிகிறது. பனியின் தாக்கத்தால் கம்பளி உள்ளிட்ட ஆடைகளை பொதுமக்கள் அணிந்து கொண்டு தான் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள்.

அதே நேரத்தில் பகல் 11 மணிக்கு பிறகு தொடங்கி மாலை 5 மணி வரை வெயில் சுட்டெரிக்கிறது. பிறகு மாலையில் குளிர் காற்றுடன் இரவு பனி பெய்ய ஆரம்பித்து உள்ளது. இதனால் பகலில் வெப்பத்தின் தன்மை அதிகரித்து உள்ளது. இரவு கடுங்குளிர் நிலவுகிறது. கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் இந்த இருவேறு காலநிலை மாற்றத்தால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.இந்த சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பலர் சளியாலும், காய்ச்சலாலும் அவதிப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதற்கிடையே போதிய மழை இல்லாத காரணத்தால் கூடலூர் பகுதியில் உள்ள அனைத்து ஆறுகளும், நீர்நிலைகளும் வறண்டு வருகிறது. ஓவேலி பகுதியில் உள்ள ஆறுகளில் தண்ணீர் வரத்து அடியோடு குறைந்து விட்டதால் கூடலூர் பகுதி மக்களின் தாகத்தை தணிக்கும் ஹெலன் குடிநீர் திட்ட அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது.

இதனால் இனி வரும் காலங்களில் குடிநீர் பிரச்சினை தலைதூக்க வாய்ப்பு உள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, கூடலூர் பகுதியில் டிசம்பர் மாதத்தை நினைவுபடுத்தும் வகையில் தற்போது கடும் குளிர் நிலவுகிறது. அதற்கு இணையாக பகலில் நன்கு வெயில் காணப்படுகிறது. மேலும் உதடுகள், கை, கால்களில் தோல் வெடிப்புகள் ஏற்படுகிறது. கோடை தொடங்கிய நிலையில் குளிர் வாட்டி எடுக்கிறது. ஆறுகள் வறண்டு வருவதால் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story