என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தண்ணீர் தொட்டிக்குள் குதித்து தற்கொலை, அழுகிய நிலையில் உடல் மீட்பு


என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தண்ணீர் தொட்டிக்குள் குதித்து தற்கொலை, அழுகிய நிலையில் உடல் மீட்பு
x
தினத்தந்தி 2 Feb 2018 10:30 PM GMT (Updated: 2 Feb 2018 7:14 PM GMT)

அதிக மதிப்பெண் பெற்று, வேலைவாய்ப்புக்கு தேர்வான என்ஜினீயரிங் கல்லூரி மாணவர், தண்ணீர் தொட்டிக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

கணபதி,

கோவை கணபதி சத்திரோடு, ஸ்ரீதேவி நகர் 5-வது வீதியை சேர்ந்தவர் வேலுமணி. இவர் கடை வைத்து வியாபாரம் செய்கிறார். இவருடைய ஒரே மகன் பரத்குமார் (வயது 21). இவர், குனியமுத் தூரில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். நன்கு படிக்கும் மாணவரான பரத்குமார், கல்லூரி தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார்.

கல்லூரியில் சமீபத்தில் நடந்த வளாக வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்ற தேர்வாகி இருந்தார். இதற்கிடையில் கடந்த 30-ந் தேதி வெளியே செல்வதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்ற பரத்குமார், அதன்பின்னர் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் பரத்குமாரை காண வில்லை. அவருடைய செல்போனும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து அவரின் தந்தை வேலுமணி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மாணவரை காணவில்லை என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் பரத்குமாரின் தாய், 10 அடி ஆழம் உள்ள வீட்டு தண்ணீர் தொட்டியை நேற்றுமாலை திறந்து பார்த்தார். அப்போது தொட்டிக்குள் மகன் அழுகிய நிலையில் பிணமாக மிதப்பதை பார்த்து கதறிதுடித்தார். இது குறித்த தகவலின் பேரில் சரவணம்பட்டி போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் கூறும்போது, ‘கடந்த சில நாட்களாக பரத்குமார் மனஉளைச்சலில் இருந்துள்ளார். எனவே அவர் தண்ணீர் தொட்டிக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது’ என்றார்.

வேலை வாய்ப்புக்கு தேர்வான என்ஜினீயரிங் மாணவர் இறந்த சம்பவம், கணபதி பகுதியில் பரிதாபத்தை ஏற் படுத்தி உள்ளது. 

Next Story