மாவட்டம் முழுவதும் பதிவு செய்யாத விடுதிகள் மீது நடவடிக்கை, கலெக்டர் எச்சரிக்கை


மாவட்டம் முழுவதும் பதிவு செய்யாத விடுதிகள் மீது நடவடிக்கை, கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 3 Feb 2018 3:30 AM IST (Updated: 3 Feb 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டம் முழுவதும் பதிவு செய்யாமல் செயல்படும் பெண்கள் விடுதி, குழந்தைகள் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

தேனி,

மத்திய, மாநில அரசுகளின் மானியம் பெறும் பெண்கள் விடுதிகள், பணிபுரியும் பெண்கள் தங்கும் விடுதிகள், மதம் சார்ந்த விடுதிகள், அரசு அல்லது தனியார் சார்பில் நடத்தப்படும் பெண்களுக்கான தங்கும் விடுதிகள், குழந்தைகள் விடுதிகள் போன்றவை அரசு அனுமதி பெற்று ஒழுங்குமுறை சட்டம் 2014 மற்றும் விதிகள் 2015-ன்கீழ் செயல்பட வேண்டும். பெண்கள், குழந்தைகள் விடுதிகளை முறையாக பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுகளாக அரசு அறிவுறுத்தி வருகிறது.

ஆனால், தேனி மாவட்டத்தில் இன்னும் பதிவு செய்யாமல் பல விடுதிகள் செயல்படுவதாக கூறப்படுகிறது. எனவே, அனைத்து விடுதிகளையும் பதிவு செய்வதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, விடுதிகளை பதிவு செய்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். இதில் சமூக நலத்துறை அதிகாரிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர்கள் மற்றும் விடுதி நடத்துபவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசும் போது கூறியதாவது:-

விடுதிகள் அனைத்தும் அரசு அனுமதி பெற்று ஒழுங்குமுறை சட்டம்-2014 மற்றும் விதிகள்-2015ன் கீழ் செயல்பட வேண்டும். விடுதிகளில் தங்கி இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு போதுமான இடவசதியுடன், 18 வயது நிரம்பியவர்களுக்கு ஒரு நபருக்கு 120 சதுர அடியும், குழந்தைகளுக்கு 40 சதுர அடியும் பரப்பளவு கொண்டதாக அறை இருக்க வேண்டும். 50 நபர்கள் தங்கி இருக்கும் விடுதியில் 10 பேருக்கு ஒரு கழிப்பிடம், 10 பேருக்கு ஒரு குளியலறை, மருத்துவம் மற்றும் முதலுதவி அறை, போதுமான பணியாளர்களுடன் சமையலறை மற்றும் இடவசதியுடன் கூடிய உணவு அருந்தும் கூடம், மனமகிழ் கூடம், தீயணைப்பு உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள், நூலகம் போன்ற வசதிகள் இருக்க வேண்டும். விடுதிகளுக்கு காவலாளிகள் நியமிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

பதிவு சான்று பெற சம்பந்தப்பட்ட விடுதி நடத்துபவர்கள் மாவட்ட கலெக்டரின் பெயரில் ரூ.3 ஆயிரத்துக்கான வரைவோலை எடுத்து, பொதுப்பணித்துறையின் கட்டிட உறுதிச்சான்று, தாசில்தாரிடம் இருந்து பெறப்படும் இடவசதி சான்று, தீயணைப்புத்துறையால் வழங்கப்பட்ட தடையில்லா சான்று, சுகாதார சான்று, சங்க பதிவு சட்டம் அல்லது அறக்கட்டளை பதிவு சட்டத்தின்கீழ் பதிவு செய்து, தணிக்கை அறிக்கை, விடுதிகளில் பணிபுரியும் பணியாளர்களின் கல்வித்தகுதி, ஊதியம் ஆகிய விவரங்களுடன், ஆண்டறிக்கையை சமூகநல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

பதிவு செய்யாத விடுதிகள் உடனே பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாத விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, தாமதம் இன்றி விடுதிகளை பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story