மாவட்ட செய்திகள்

வடமதுரை அருகே கயிறு தொழிற்சாலையில் தீ + "||" + Fire in the rope factory

வடமதுரை அருகே கயிறு தொழிற்சாலையில் தீ

வடமதுரை அருகே கயிறு தொழிற்சாலையில் தீ
வடமதுரை அருகே கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனை தீயணைப்பு படையினர் போராடி அணைத்தனர்.
வடமதுரை,

வடமதுரை-திண்டுக்கல் சாலையில் கால்நடை மருத்துவமனையின் பின்புறம் தனியாருக்கு சொந்தமான தேங்காய் நாரில் இருந்து கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. நேற்று மதியம் தொழிற்சாலை எந்திரத்தில் திடீரென ஏற்பட்ட தீப்பொறி தேங்காய் நாரில் பட்டு தீப்பற்றியது.


இதனைக்கண்ட தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அது முடியவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பரவியதால் அப்பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்தது. இதுகுறித்து திண்டுக்கல் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் களம் இறங்கினர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்தனர். இருப்பினும் தொழிற்சாலையில் இருந்த எந்திரங்கள், கயிறு தயாரிக்கும் நார் உள்ளிட்டவை முற்றிலும் எரிந்து நாசமாயின.

இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.