மோட்டார் சைக்கிள் மோதி சிறுமி படுகாயம்: மாணவ, மாணவிகளுடன் பொதுமக்கள் சாலை மறியல்


மோட்டார் சைக்கிள் மோதி சிறுமி படுகாயம்: மாணவ, மாணவிகளுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 3 Feb 2018 3:45 AM IST (Updated: 3 Feb 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

வத்தலக்குண்டு அருகே மோட்டார் சைக்கிள் மோதி சிறுமி படுகாயம் அடைந்தாள். இதையடுத்து பள்ளியின் முன்பு வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வத்தலக்குண்டு,

வத்தலக்குண்டு அருகே உள்ள கட்டகாமன்பட்டியை சேர்ந்தவர் செல்லையா. அவருடைய மகள் கார்த்திகா (வயது 6). அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறாள். இவள் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு செல்வதற்காக வத்தலக்குண்டு-தேனி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் கார்த்திகா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயம் அடைந்த அவள், வலியால் அலறி துடித்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவளை மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வத்தலக்குண்டு-தேனி தேசிய நெடுஞ்சாலையோரமாக பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு சாலையை கடந்து தான் செல்ல வேண்டும். எனவே அங்கு வாகனங்கள் மெதுவாக செல்லும் வகையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் விபத்து நடப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதையடுத்து நேற்று அப்பகுதி மக்கள் திரண்டு பள்ளி முன்பு வேகத்தடை அமைக்கக்கோரி மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல்லில் இருந்து வரும் வாகனங்கள் இந்த சாலை வழியாக தான் தேனி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும். இதனால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன், வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

தற்காலிகமாக பள்ளி முன்பு இரும்பு தடுப்புகள் (பேரிகார்டு) வைப்பதாகவும், ஒரு வாரத்தில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக் கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே நேற்று மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் வீட்டுக்கு அழைத்து சென்றனர். 

Next Story