பல்லடம் அருகே நூல் குடோனில் தீ விபத்து


பல்லடம் அருகே நூல் குடோனில் தீ விபத்து
x
தினத்தந்தி 3 Feb 2018 3:00 AM IST (Updated: 3 Feb 2018 1:18 AM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே நூல் குடோனில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் பழைய நூல்கள் எரிந்து சாம்பலானது.

பல்லடம்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சி.ஆர்.பி. லே அவுட்டை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 54). இவர் பல்லடம் திருவள்ளூவர் நகரில் பழைய நூல்கள் மற்றும் பழைய சாக்கு குடோன் வைத்துள்ளார். இந்த குடோனில் நூல்கள் மற்றும் பழைய சாக்குகளை வைத்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் இந்த குடோனில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென்று குடோன் முழுவதும் பரவியது. குடோன் தீப்பிடித்து எரிந்ததால் அதில் இருந்து புகை வெளியேறியது. மேலும் காற்று வீசியதால், தீ அதன் அருகில் உள்ள மெகராஜ் என்பவரது வீட்டிற்கும் பரவியது.

உடனே அருகில் உள்ளவர்கள் பல்லடம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் குடோனில் ரூ.2½ லட்சம் மதிப்பிலான நூல்கள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசம் ஆனதாக கூறப்படுகிறது.

மேலும் அருகில் உள்ள வீட்டின் ஜன்னல், கதவு மற்றும் பிளாஸ்டிக் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவையும் எரிந்து சேதம் ஆனது. தீ விபத்துக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இது குறித்து பல்லடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். முன்னதாக தீ விபத்தை பார்க்க ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story