வரி உயர்வுகளை கண்டித்து புதுச்சேரியில் 20-ந்தேதி கடையடைப்பு


வரி உயர்வுகளை கண்டித்து புதுச்சேரியில் 20-ந்தேதி கடையடைப்பு
x
தினத்தந்தி 2 Feb 2018 10:45 PM GMT (Updated: 2 Feb 2018 8:24 PM GMT)

புதுவையில் வரிகளை உயர்த்தியதை கண்டித்து வணிகர்கள் வருகிற 20-ந்தேதி கடையடைப்பு போராட்டம் நடத்துகிறார்கள்.

புதுச்சேரி,

புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பின் தலைவர் சிவசங்கரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரியில் கடந்த ஓராண்டாக பல்வேறு காரணங்களால் வியாபாரம் மந்தநிலையில் உள்ளது. இந்தநிலையில் நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்துகள் வரிகளை தன்னிச்சையாக பல மடங்கு உயர்த்தி உள்ளன.

பொதுமக்களிடம் வீட்டுவரி, வியாபாரிகளிடம் கட்டிடம், வணிக வளாகம், வணிக உரிம கட்டணம், தொழில் என 3 வரிகளை வசூலித்து வரும் சூழ்நிலையில் புதிதாக குப்பை அள்ளவும் வரியினை கட்ட சொல்லி வீடுகள், கடைகளுக்கு நோட்டீசு அனுப்பி வருகிறது. மேலும் சொத்துவரி, தொழில்வரி, வணிக உரிம கட்டண வரியினை பல மடங்கு உயர்த்தியும் உள்ளது. இந்த வரி உயர்வு பொதுமக்கள் வியாபாரிகளிடம் பெரும் அதிர்ச்சியையும் எதிர்ப்பினையும் உருவாக்கி உள்ளது.

வரி உயர்வு என்பது மக்களை பாதிக்காத வகையில் இருக்கவேண்டும். மக்களிடம் வெறுப்பினை உருவாக்கும் விதத்தில் இருக்கக்கூடாது. தூய்மை இந்தியா திட்டத்தின்படி ஏற்கனவே மத்திய மாநில அரசு பொதுமக்கள், வியாபாரிகளிடம் செஸ் வரி வசூலித்து வருகிறது. இதே திட்டத்திற்கு புதுச்சேரி அரசும் கட்டணம் வசூலிப்பது ஏற்புடையதல்ல. தூய்மை இந்தியா திட்ட செலவுக்கு மத்திய அரசிடம் மாநில அரசு நிதியினை கேட்டுப்பெற வேண்டும். அதைவிடுத்து ஒரே திட்டத்துக்கு மத்திய அரசும், மாநில அரசும் மக்களிடம் வரி வசூலிக்கக்கூடாது.

சொத்துவரி கணக்கீட்டில் உள்ள முரண்பாடுகள் பொதுமக்கள், வியாபாரிகளிடம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதை மறுபரிசீலனை செய்து குறைக்கவேண்டும்.

உயர்த்தப்பட்டுள்ள வரிகளை குறைக்க எம்.எல்.ஏ.க்கள், வியாபார சங்கங்கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கொண்ட கமிட்டியினை ஏற்படுத்தி சந்தை நிலவர அடிப்படையில் புது வரி கொள்கையினை உருவாக்கவேண்டும்.

புதுவையின் முதல்-அமைச்சர்களாக ரங்கசாமி, வைத்திலிங்கம் இருந்தபோது தனியார் வசம் ஒப்பந்தம் செய்து மிக சிறப்பாக குப்பை வாரும் பணி நடந்தது. தற்போது இதற்கு வரி வசூலிப்பது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளது. எனவே குப்பை வார வசூலிக்கப்படும் வரியினை அறவே கைவிட வேண்டும்.

நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவு செய்து உயர்த்தப்பட்டுள்ள வரிகளை கைவிடக்கோரி புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சார்பாக வருகிற 20-ந்தேதி கடையடைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த போராட்டத்துக்கு அனைத்து வியாபார சங்கங்களும், பொதுமக்களும் முழு ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு சிவசங்கரன் கூறினார். 

Next Story