மாவட்ட செய்திகள்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா; கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்கிறார் + "||" + Chidambaram Annamalai University Graduation Ceremony

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா; கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்கிறார்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா; கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்கிறார்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வருகிற 17-ந்தேதி பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்குகிறார்.
சிதம்பரம்,

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் பன்னாட்டு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக துணை வேந்தர் எஸ்.மணியன், இந்திய வானிலை தலைமை நிலை இயக்குனர் ரமேஷ், சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்தர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.


கருத்தரங்கம் முடிந்ததும் பல்கலைக்கழக துணை வேந்தர் எஸ்.மணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 81-வது பட்டமளிப்பு விழா வருகிற 17-ந்தேதி(சனிக்கிழமை) பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடைபெற இருக்கிறது. இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் பங்கேற்று, பட்டங்களை வழங்க இருக்கின்றனர். இதில் நேரடியாக 200 மாணவர்கள் வீதம் மொத்தம் 4½ லட்சம் பேருக்கு பட்டம் வழங்கப்பட இருக்கிறது.

பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள நிதி சிக்கல் விரைவில் சீராகும். ஏனெனில் அரசு பல்கலைக்கழகத்துக்கு வழங்கும் நிதியை அதிகப்படுத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறது. இங்குள்ள தனி அதிகாரிகள், தொடர்பு அதிகாரிகளை பொறுத்தரை அவர்களது பணிகள் குறித்து ஆட்சி மன்ற குழுவால் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அவர்களுக்கு அரசு பணியிடம் வழங்கும்.

ஒரு படிப்பு மையத்திற்கு ஒரு தனி அலுவலரை மட்டுமே வைத்து விட்டு மற்றவர்கள் வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்படுவர். இதில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதி உள்ள நபர்களை மாற்றுவது குறித்து அரசு ஆலோசனை செய்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ந்தேதி 80-வது பட்டமளிப்பு விழா நடந்தது. அதன்பின்னர் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட நிதிநெருக்கடி காரணமாக ஆசிரியர்கள், ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து தமிழக அரசு பல்கலைக்கழகத்திற்கு நிர்வாக அதிகாரியை நியமித்து, தனி சட்டம் இயற்றி அரசே பல்கலைக்கழகத்தை ஏற்றது. இதன் பின்னர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை. இந்த நிலையில் வருகிற 17-ந்தேதி பட்டமளிப்பு விழா நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.