சகோதரரை குடும்பத்துடன் தீர்த்து கட்டியவருக்கு 37 ஆண்டு ஜெயில்


சகோதரரை குடும்பத்துடன் தீர்த்து கட்டியவருக்கு 37 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 3 Feb 2018 12:30 AM GMT (Updated: 2 Feb 2018 8:30 PM GMT)

சாதி மாறி திருமணம் செய்ததால் ஆத்திரம் அடைந்து சகோதரரை குடும்பத்துடன் தீர்த்து கட்டியவருக்கு 37 ஆண்டு ஜெயில் தண்டனையும், உடந்தையாக இருந்தவர்களுக்கு தலா 30 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தஞ்சை கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டது.

தஞ்சாவூர்,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த கோட்டூர் அருகே உள்ள மேலமருதூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் பழனியப்பன்(வயது44). கொத்தனார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, 2 மகன்கள், மகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்த பழனியப்பன், கோவையில் கொத்தனார் வேலை செய்து வந்தார். கோவையில் இருந்து தனது சொந்த ஊரான மேலமருதூருக்கு அடிக்கடி பழனியப்பன் வந்து செல்வது வழக்கம்.

அப்போது கீழமருதூர் வடக்கு தெருவை சேர்ந்த கணேசன் மகள் அமிர்தவள்ளியுடன்(28) பழக்கம் ஏற்பட்டது. மாற்றுத்திறனாளியான அமிர்தவள்ளி, டிப்ளமோ நர்சிங் படித்துவிட்டு ஆதிச்சபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிகமாக நர்சாக வேலை பார்த்து வந்தார். இவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி பழனியப்பன் கோவைக்கு அழைத்து சென்றார்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பழனியப்பன் வீட்டில் இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டு கோவை, திருப்பூர், தஞ்சையில் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்த்தால் குடும்பத்தினருக்கு தங்கள் மீதுள்ள கோபம் குறைந்து விடும் என்ற எண்ணத்தில் பிறந்து 40 நாட்களே ஆன ஆண் குழந்தையுடன் பழனியப்பனும், அமிர்தவள்ளியும் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ந் தேதி கோவையில் இருந்து பஸ்சில் சொந்த ஊருக்கு புறப்பட்டு வந்தனர்.

கோட்டூர் அருகே உள்ள ஆதிச்சபுரம் வளைவில்(ஆர்ச்) பஸ்சில் இருந்து இறங்கிய அவர்கள், வேதபுரம் ரோட்டில் நடந்து சென்றனர். இரவு 11 மணி அளவில் ஓ.என்.ஜி.சி. அலுவலகம் அருகே காளியம்மாள் என்பருக்கு சொந்தமான வயல் வழியாக நடந்து சென்றபோது அங்கு பழனியப்பனின் அண்ணன்கள் மேலமருதூர் தெற்கு தெருவை சேர்ந்த சிவசுப்பிரமணியன்(46), ராமகிருஷ்ணன்(51) மற்றும் இவர்களது நண்பர்கள் மேலபனையூரைச் சேர்ந்த துரைராஜ்(59), மகேந்திரன்(29) ஆகியோர் அங்கு வந்தனர்.

நம்ம குடும்ப கவுரவத்தையே கெடுத்து விட்டாயே என கூறிய அவர்கள், பழனியப்பனை கட்டையால் தாக்கி கீழே தள்ளினர். பின்னர் அவரை வயலில் தள்ளி அவரது தலையை சேற்றில் புதைத்து கொலை செய்தனர். அவரது கை, கால், உடல் மட்டுமே வெளியே தெரிந்த நிலையில் இருந்தது. பின்னர் அமிர்தவள்ளியை கழுத்தை நெரித்து கொலை செய்தனர். அப்படியும் ஆத்திரம் தணியாததால் பச்சிளம் ஆண் குழந்தையையும் தரையில் போட்டு காலால் மிதித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தனர்.

ஒரே இடத்தில் 3 உடல்கள் கிடந்தால் தங்களை கண்டுபிடித்து விடுவார்கள் என்று கருதிய சிவசுப்பிரமணியனும், ராமகிருஷ்ணனும் மோட்டார் சைக்கிளில் அமிர்தவள்ளியின் உடலை வைத்துக்கொண்டு ஆதிச்சபுரம் வளைவு அருகே கூத்தாநல்லூர் சாலையில் குன்னியூர் அரிச்சந்திரா ஆற்றுப்பாலம் அருகே சென்றனர். அங்கே அவரது உடலை போட்டு விட்டு கட்டைப்பையில் குழந்தையின் உடலை எடுத்துச்சென்று குன்னியூர் சுடுகாடு அருகே உள்ள நெல் வயலில் வீசிவிட்டு சென்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன்-மனைவி மற்றும் அவர்களது குழந்தை என 3 பேர் கொலை செய்யப்பட்ட தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இது குறித்து ஆதிச்சபுரம் கிராம நிர்வாக அலுவலர் முரளி, கோட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக சிவசுப்பிரமணியன், ராமகிருஷ்ணன், துரைராஜ், மகேந்திரன் ஆகிய 4 பேரும் ஆதிச்சபுரம் கிராம நிர்வாக அலுவலர் முன்பு சரண் அடைந்தனர்.

பல பெண்களுடன் தொடர்பு வைத்து இருந்ததுடன், வேறு சாதியை சேர்ந்த அமிர்தவள்ளியை அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டதால் குடும்ப கவுரவம் பறிபோனது. இதனால் 3 பேரையும் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர். இதனையடுத்து சரண் அடைந்த அவர்கள் 4 பேரையும் கோட்டூர் போலீசார் கைது செய்து தஞ்சை முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு கோர்ட்டில்(குடியுரிமை பாதுகாப்பு) வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி கார்த்திகேயன் வழக்கை விசாரணை செய்து குற்றம் சாட்டப்பட்ட 4 பேரையும் குற்றவாளிகள் என கடந்த மாதம்(ஜனவரி) 29-ந் தேதி தீர்ப்பு அளித்தார். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் பிப்ரவரி 2-ந் தேதி(நேற்று) அறிவிக்கப்படும் என்று கூறினார்.

அதன்படி நேற்று இரவு 8 மணிக்கு நீதிபதி கார்த்திகேயன் பரபரப்பான தீர்ப்பு வழங்கினார். அவர் தனது தீர்ப்பில், 3 கொலைகளுக்கும் தலா ஒரு ஆயுள் தண்டனை வீதம் சிவசுப்பிரமணியன், ராமகிருஷ்ணன், துரைராஜ் ஆகியோருக்கு 3 ஆயுள் தண்டனையும், தலா ரூ.30 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் தலா 1 ஆண்டு சிறை தண்டனையும், தடயத்தை மறைத்ததற்காக சிவசுப்பிரமணியனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.

அதிகபட்சமாக சிவசுப்பிரமணியன் 37 ஆண்டுகளும், ராமகிருஷ்ணன், துரைராஜ் ஆகியோர் தலா 30 ஆண்டுகளும் கண்டிப்பாக சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் தீர்ப்பு கூறினார். தடயத்தை மறைத்ததற்காக மகேந்திரனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சதீஷ்குமார் ஆஜராகி வாதாடினார்.

நீதிபதி தண்டனையை அறிவித்தவுடன் அதிவிரைவுப்படையினர் கோர்ட்டுக்கு வரவழைக்கப்பட்டனர். மேலும் ஏராளமான போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் நேற்று இரவு பெரும் பரபரப்பு நிலவியது.

Next Story