மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவ காப்பீட்டு திட்டத்தால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை மந்திரி ரமேஷ்குமார் பேட்டி


மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவ காப்பீட்டு திட்டத்தால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை மந்திரி ரமேஷ்குமார் பேட்டி
x
தினத்தந்தி 3 Feb 2018 3:00 AM IST (Updated: 3 Feb 2018 2:50 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு அறிவித்துள்ள மருத்துவ காப்பீட்டு திட்டத்தால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று மந்திரி ரமேஷ்குமார் கூறினார்.

பெங்களூரு,

மத்திய அரசு அறிவித்துள்ள மருத்துவ காப்பீட்டு திட்டத்தால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று மந்திரி ரமேஷ்குமார் கூறினார்.

கர்நாடக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ரமேஷ்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

எந்த பயனும் இல்லை


மத்திய பட்ஜெட்டில் 10 கோடி குடும்பத்துக்கு ஒவ்வொருவருக்கும் ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீட்டு திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 50 கோடி பேருக்கு ஆண்டுக்கு வெறும் ரூ.2,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி போதுமா?. இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. கர்நாடகத்தில் அனைவரையும் உள்ளடக்கி பொது காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். இந்த திட்டத்தை முதல்-மந்திரி சித்தராமையா இந்த மாதத்தில் தொடங்கி வைக்கிறார்.

இந்த திட்டத்திற்கு மட்டும் கர்நாடக அரசு ரூ.1,200 கோடி ஒதுக்கி உள்ளது. இன்னும் கூடுதல் நிதி ஒதுக்க உள்ளோம். இதன் மூலம் எம்.எல்.ஏ.க்கள், அரசு ஊழியர்கள், ஏழை நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை பெற முடியும். அரசு மருத்துவமனைகளில் இல்லாத மருத்துவ வசதிகளுக்கு மட்டுமே தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படும். ஆதார் அட்டை பயன்படுத்துபவர்கள் அனைவருக்கும் இந்த பொது மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை விநியோகம் செய்யப்படும்.

ரத்த சுத்திகரிப்பு மையங்கள்

அரசு தாலுகா மருத்துவமனைகளில் ரத்த சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மாவட்ட அரசு மருத்துவமனைகளில் எம்.ஆர்.ஐ., சி.டி.ஸ்கேன் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ நிபுணர்களை நியமிக்கும் பணிகளை மேற்கொள்ள உள்ளோம்.

இவ்வாறு ரமேஷ்குமார் கூறினார்.

Next Story