சந்தோஷ் கொலையை கண்டித்து பெங்களூருவில், பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் ஷோபா எம்.பி. தலைமையில் நடந்தது


சந்தோஷ் கொலையை கண்டித்து பெங்களூருவில், பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் ஷோபா எம்.பி. தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 2 Feb 2018 9:30 PM GMT (Updated: 2 Feb 2018 9:28 PM GMT)

பா.ஜனதா தொண்டர் சந்தோஷ் கொலையை கண்டித்து அந்த கட்சியின் சார்பில் பெங்களூருவில் ஷோபா எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெங்களூரு,

பா.ஜனதா தொண்டர் சந்தோஷ் கொலையை கண்டித்து அந்த கட்சியின் சார்பில் பெங்களூருவில் ஷோபா எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்

பெங்களூரு ஜே.சி.நகர் சென்னப்பா கார்டன் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். பா.ஜனதா தொண்டரான இவர் கடந்த 1-ந் தேதி 4 பேர் கொண்ட கும்பலால் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நேற்று பெங்களூரு அனந்தராவ் சர்க்கிளில் ஷோபா எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்னாள் துணை முதல்-மந்திரி அசோக் உள்பட பா.ஜனதாவினர் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு இல்லை

மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஷோபா எம்.பி. பேசியதாவது:-

கொலை செய்யப்பட்ட சந்தோஷ் கடந்த சட்டசபை தேர்தலின் போது எங்களது கட்சியின் பூத் ஏஜெண்டாக செயல்பட்டார். தற்போது சமூக வலைத்தள குழுவில் எங்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.

மாநிலத்தில் இந்து, பா.ஜனதா பிரமுகர்கள் படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகிறது. பா.ஜனதா தொண்டர்களுக்கு மாநிலத்தில் பாதுகாப்பு இல்லை. சட்டம், ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து விட்டது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான அத்துமீறல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் அராஜகம் தாண்டவம் ஆடுகிறது. சிறுபான்மை மக்களை கவர இந்த அரசு குற்றவாளிகள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

கொலை செய்யப்பட்ட பா.ஜனதா பிரமுகர்கள் வீட்டிற்கு சென்று அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்கும் மனிதநேயம் கூட முதல்-மந்திரி சித்தராமையாவிற்கு இல்லை. பெங்களூருவில் ஜே.சி.நகரில் கொலை செய்யப்பட்ட சந்தோசின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தை சந்தித்து சித்தராமையா ஆறுதல் கூறவில்லை.

தேசிய புலனாய்வு விசாரணைக்கு...

ஆனால் அந்த பகுதியில் உள்ள மந்திரி காகோடு திம்மப்பாவின் வீட்டிற்கு சென்று உணவு அருந்தி உள்ளார். இது மனிதாபிமானமற்ற செயல். இந்த வழக்கை போலீஸ் மந்திரி ராமலிங்க ரெட்டி திசை திருப்ப முயற்சி செய்கிறார். எனவே சந்தோஷ் கொலை குறித்து தேசிய புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story