மும்பை மாநகராட்சி கல்வி பட்ஜெட் தாக்கல் புதிய பள்ளி கட்டிடங்கள் கட்ட ரூ.277 கோடி ஒதுக்கீடு மாணவர்களின் பெற்றோருக்கும் இலவச பஸ் பாஸ்


மும்பை மாநகராட்சி கல்வி பட்ஜெட் தாக்கல் புதிய பள்ளி கட்டிடங்கள் கட்ட ரூ.277 கோடி ஒதுக்கீடு மாணவர்களின் பெற்றோருக்கும் இலவச பஸ் பாஸ்
x
தினத்தந்தி 3 Feb 2018 4:15 AM IST (Updated: 3 Feb 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

ரூ.2 ஆயிரத்து 569 கோடி கல்வி பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. புதிய பள்ளி கட்டிடங்கள் கட்ட ரூ.277½ கோடி ஒதுக்கப்பட்டுள்ளது

மும்பை,

ரூ.2 ஆயிரத்து 569 கோடி கல்வி பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. புதிய பள்ளி கட்டிடங்கள் கட்ட ரூ.277½ கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், மாணவர்களின் பெற்றோருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட உள்ளது.

இலவச பஸ் பாஸ் திட்டம்

மும்பை மாநகராட்சியில் ரூ.2 ஆயிரத்து 569 கோடியே 35 லட்சம் கல்வி பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. கல்வி பட்ஜெட்டை மாநகராட்சி கூடுதல் கமிஷனர் ஏ.எல்.ஜார்கத் கல்வி கமிட்டி முன் தாக்கல் செய்தார். கல்வி பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

கடந்த மாநகராட்சி தேர்தலின் போது மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என சிவசேனா கட்சி வாக்குறுதி அளித்து இருந்தது. கடந்த ஆண்டு இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது சுமார் 7 ஆயிரம் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் இலவச பஸ் பாஸ் திட்டத்தின் மூலம் பயன் அடைந்து வருகின்றனர்.

இந்தநிலையில் நடப்பாண்டில் மாநகராட்சி பள்ளி குழந்தைகளுடன் செல்லும் பெற்றோருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட உள்ளதாக பட்ஜெட்டில் கூறப்பட்டு உள்ளது. இலவச பஸ் பாஸ் திட்டத்திற்காக ரூ.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய பள்ளி கட்டிடங்கள்

கடந்த 2015-ம் ஆண்டு முதல் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இலவச கையடக்க கணினி வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு 2018-19-ம் ஆண்டில் இலவச கையடக்க கணினி வழங்க ரூ.18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பள்ளிகளை சீரமைக்க, புதிய கட்டிடங்கள் கட்ட ரூ.277 கோடியே 67 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி பள்ளிகளில் 63 இடங்களில் கட்டுமான சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 12 இடங்களில் புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. 7 பள்ளிகளில் உள்ள விளையாட்டு மைதானங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.

டிஜிட்டல் வகுப்பறை


இதேபோல மும்பையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள் அமைக்கப்பட்ட உள்ளன. இதற்காக வகுப்பறைகளில் எல்.இ.டி. திரை, கணினி, ஒலிப்பெருக்கி போன்றவை வைக்கப்பட உள்ளன. இந்த திட்டத்திற்காக ரூ.37 கோடியே 38 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் கணினி மையங்கள் அமைக்க ரூ.8 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோல மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காவலாளிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் 381 மாநகராட்சி பள்ளி வளாகத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 64 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவுடன் ஊட்டச்சத்து நிறைந்த உணவுப்பொருளையும் கொடுக்க மாநகராட்சி முடிவு செய்து உள்ளது. இந்த திட்டத்திற்காக ரூ.28 கோடியே 38 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தானியங்கி நாப்கின் எந்திரம்

மாநகராட்சி பள்ளிகளில் சர்வதேச பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள 159 மாநகராட்சி உயர்நிலை பள்ளிகளில் 172 தானியங்கி நாப்கின் எந்திரம் வைக்கப்பட்டுள்ளது.

2018-19-ம் நிதி ஆண்டில் 345 இடைநிலை பள்ளிகளில் (6 முதல் 8-ம் வகுப்பு வரை) 381 தானியங்கி நாப்கின் எந்திரங்கள் வைக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.2½ கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Next Story