தமிழகத்தில் பா.ஜனதா மிக வேகமாக வளர்ந்து வருகிறது - வானதி சீனிவாசன் பேட்டி


தமிழகத்தில் பா.ஜனதா மிக வேகமாக வளர்ந்து வருகிறது - வானதி சீனிவாசன் பேட்டி
x
தினத்தந்தி 4 Feb 2018 4:15 AM IST (Updated: 4 Feb 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பா.ஜனதா மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்று பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

ராமநாதபுரம்,

விவேகானந்தரின் முக்கிய சீடர்களில் ஒருவரான சகோதரி நிவேதிதையின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவாக கடந்த ஜனவரி 22-ந்தேதி கோவையில் இருந்து ரதயாத்திரை தொடங்கியது. இந்த ரதம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வழியாக சென்று பிப்ரவரி 22-ந்தேதி சென்னையில் முடிவடைகிறது. இந்த ரதயாத்திரை நேற்று காலை ராமநாதபுரம் வந்தது. ராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் உள்ள விவேகானந்த பாஸ்கரம் ராமகிருஷ்ணமடத்தில் இந்த ரதத்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ராமநாதபுரத்தில் இந்த ரத யாத்திரையை ராமகிருஷ்ணமடத்தின் தலைவர் சுதபானந்தர் தொடங்கி வைத்து ஆசி வழங்கினார். தொடர்ந்து ராமநாதபுரம் ராமலிங்க விலாசம் அரண்மனையில் ராமேசுவரம் ராமநாதசாமி திருக்கோவில் அறங்காவலர்குழு தலைவர் குமரன்சேதுபதி, ரதயாத்திரை வரவேற்புக்குழு தலைவர் ராணி லட்சுமி ஆகியோர் வரவேற்பு அளித்தனர். விவேகானந்தர் ஸ்தூபி அருகே ஞானதீப சேவா சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன்பின்னர் ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது கல்லூரி முதல்வர் கீதா நடராஜன் வரவேற்று பேசினார். டாக்டர் மதுரம் அரவிந்தராஜ் வாழ்த்தி பேசினார். ரதயாத்திரை குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் வானதி சீனிவாசன், இசைக்கவி ரமணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். பின்பு செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா தலைமையில் ரத யாத்திரைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் அமானுல்லா ஹமீது முன்னிலை வகித்தார்.

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரை, மாவட்ட த.மா.கா. தலைவர் ரவிச்சந்திரராமவன்னி ஆகியோர் வாழ்த்தி பேசினர். வரவேற்பு குழு உறுப்பினர்கள் டாக்டர் பாத்திமா சின்னத்துரை, பா.ஜனதா மாவட்ட தலைவர் முரளிதரன், மாவட்ட செயலாளர் ஆத்மா கார்த்திக் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த ரத வரவேற்பில் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

பின்னர் பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய அரசு அனைத்து மக்களின் முன்னேற்றத்திற்கான வரவேற்கத்தக்க சிறந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. மீனவர்களின் நலன், விவசாயிகளின் நலன் என அனைத்து தரப்பினரின் நலனை பாதுகாக்க கூடிய திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. தொழில்துறை வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. பா.ஜனதாஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜனதாவின் தோல்வி குறித்து கட்சி தலைமை கவனித்து அதற்கான காரணம் குறித்து ஆராய்ந்து அதற்கு ஏற்ப முடிவெடுக்கும். இருப்பினும் இந்த தோல்வியால் அங்குபெரிய மாற்றம் ஏற்பட்டுவிடப்போவதில்லை.

தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜமானது. தமிழகத்தில் பா.ஜனதா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பா.ஜனதாவிற்கு நல்ல செல்வாக்கு உள்ளது. நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது வரவேற்கத்தக்கது. யார் வேண்டுமானாலும் வரலாம். மக்களின் செல்வாக்கை பெற்றால்தான் அரசியலில் வெற்றி பெறமுடியும். இருவரும் அரசியலுக்கு வருவதால் பெரிய கட்சிகளை பாதிக்கும் என்று கூறமுடியாது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story