பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடலில் மீன்கள் இனப்பெருக்கத்திற்கு எதிரியான ஜெல்லிகள் அதிகரிப்பு, மீனவர்கள் கலக்கம்


பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடலில் மீன்கள் இனப்பெருக்கத்திற்கு எதிரியான ஜெல்லிகள் அதிகரிப்பு, மீனவர்கள் கலக்கம்
x
தினத்தந்தி 4 Feb 2018 3:45 AM IST (Updated: 4 Feb 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதியில் நேற்று ஏராளமான மீனவர்கள் கரை வலை மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதியில் நேற்று ஏராளமான மீனவர்கள் கரை வலை மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதில் மீன்கள் இனப்பெருக்கத்திற்கு எதிரியான ஜெல்லி மீன்கள் அதிகஅளவில் பிடிபட்டு இருந்தன. கடலில் உள்ள சிறிய மீன் குஞ்சுகள் முதல் பெரிய மீன்கள் வரை ஜெல்லி மீன்கள் இரையாக்குவதால் மீன்கள் இனப் பெருக்கத்திற்கு சிக்கல் ஏற்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட வலைகளில் மீன் பிடிப்பதால் கடலில் உள்ள மீன்வளங்கள் குறைந்து வரும் நிலையில் தற்போது ஜெல்லி மீன் அதிகரிப்பால் மீன்கள் இனப்பெருக்கத்திற்கு சிக்கல் ஏற்பட்டுஉள்ளது. இதனால் மீனவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

ஜெல்லி மீன் பற்றி மண்டபம் வனச்சரகர் சதீஷ் கூறியதாவது:- மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடலில் ஜெல்லி மீன்கள் மிக அதிகஅளவில் வாழ்ந்து வருகின்றன. ஜெல்லி மீன் ஒரு முதுகெலும்பில்லாத உயிரினம். இந்த உயிரினத்திற்கு மூளை,ரத்தம், இதயம், காது, மூக்கு கிடையாது. இதன் உடலில் ஒரு வித விஷத்தன்மை கொண்ட வாயு இருப்பதால் அதை பயன்படுத்தி கடலில் உள்ள மீன் குஞ்சுகள் முதல் அனைத்து மீன்களையும் எளிதில் பிடித்து சாப்பிடும் தன்மை கொண்டது. கடலில் மீன்கள் இனப் பெருக்கத்திற்கு முதல் எதிரியே இந்த ஜெல்லி மீன் தான். கடந்த சில ஆண்டுகளாக ராமேசுவரம், தனுஷ்கோடி உள்ளிட்ட பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடலில் ஜெல்லி மீன்கள் அதிகரித்து உள்ளன. அதற்கு காரணம் ஆமைகள் குறைந்து வருவது முக்கிய காரணம். கடலில் உள்ள ஜெல்லி மீன்களை ஆமைகள் உணவாக உட்கொள்ளும். மீன்கள் இனப்பெருக்கத்திற்கு முதல் எதிரியாக விளங்கும் இந்த ஜெல்லி மீன்களை முழுமையாக அழிக்க வேண்டும் என்றால் மீனவர்கள் கடல் ஆமைகளை பாதுகாக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story