மானிய ஸ்கூட்டர் திட்டத்திற்கு ஓட்டுனர் பயிற்சி உரிமம் பெற போக்குவரத்து அலுவலகத்தில் குவியும் பெண்கள்


மானிய ஸ்கூட்டர் திட்டத்திற்கு ஓட்டுனர் பயிற்சி உரிமம் பெற போக்குவரத்து அலுவலகத்தில் குவியும் பெண்கள்
x
தினத்தந்தி 4 Feb 2018 4:30 AM IST (Updated: 4 Feb 2018 1:01 AM IST)
t-max-icont-min-icon

மானிய ஸ்கூட்டர் திட்டத்திற்கு ஓட்டுனர் பயிற்சி உரிமம் பெற போக்குவரத்து அலுவலகத்தில் பெண்கள் குவிந்து வருகின்றனர். அவர்களுக்கு இரவு வரை சான்றிதழ் வழங்கப்படுகிறது.

திருச்சி,

பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார். இந்த திட்டத்தை ஜெயலலிதா பிறந்த நாளான வருகிற 24-ந்தேதி முதல் வழங்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த திட்டத்தின்கீழ் 18 வயது முதல் 40 வரை உள்ள பெண்கள் பயன் பெறலாம். இரு சக்கர வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது அதிக பட்சமாக ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

கல்வித்தகுதியாக 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்து இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கு ஓட்டுனர் உரிமம் அல்லது ஓட்டுனர் பயிற்சி உரிமம் வைத்து இருக்க வேண்டும். எனவே ஓட்டுனர் உரிமம் இல்லாத பெண்கள் ஓட்டுனர் பயிற்சி உரிமம் பெற கடந்த சில நாட்களாக தினமும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்று செல்கின்றனர்.

இந்த திட்டத்திற்கான விண்ணப்ப படிவம் நாளை (திங்கட்கிழமை)-க்குள் அந்தந்த மாநகராட்சி, ஊராட்சி ஒன்றியம், நகராட்சி பேரூராட்சி ஆகிய அலுவலகங்களில் வழங்க வேண்டும். இதனால் விடுமுறை தினமான சனிக்கிழமை வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்படும் என்று அரசு அறிவித்து இருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டது.

இதைத்தொடர்ந்து ஓட்டுனர் உரிமம் இல்லாத பெண்கள் ஓட்டுனர் பயிற்சி உரிமம் பெற நேற்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நீண்ட வரிசையில் காத்து கிடந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறும் போது, ஓட்டுனர் பயிற்சி உரிமம் பெறுவதற்காக காலை 8 மணிக்கே வந்து நீண்ட வரிசையில் காத்திருக்கிறோம். காலை 10 மணி அளவில் கணினி செயல்பட வில்லை. இதனால் உரிமம் வழங்க கால தாமதம் ஆகி உள்ளது. மேலும் ஒரு சிலர் கட்சிக்காரர்கள் என்று கூறி கொண்டு வரிசையில் நிற்காமல் நேராக அலுவலகத்திற்குள் சென்று சான்றிதழ் பெற்று செல்கின்றனர். மேலும், ஒரு சில புரோக்கர்கள் பெண்களிடம் இருந்து ரூ.ஆயிரம் பெற்றுக்கொண்டு நேரடியாக அலுவலகத்திற்குள் சென்று உரிமம் பெற்று கொடுக்கின்றனர். இதனால் வரிசையில் காத்து நிற்கும் நாங்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளோம் என்று குற்றம் சாட்டினர்.

இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்களிடம் கேட்டபோது நேற்று சிறிது நேரம் கணினி செயல்படவில்லை. பிறகு அது சரி செய்யப்பட்டது. வழக்கமாக ஒரு நாளைக்கு 70 முதல் 80 பேர் வரை தான் ஓட்டுனர் பயிற்சி உரிமம் பெற வருவார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக தினமும் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் வருகின்றனர். அவர்களுக்கு இரவு வரை இருந்து சான்றிதழ் வழங்கி வருகிறோம் என்று கூறினர்.

பெண்களின் குற்றச்சாட்டு காரணமாக நேற்று காலை முதல் இரவு வரை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் மணப்பாறை அருகே மாகாளிப்பட்டியில் உள்ள வட்டார போக்குவரத்து (பகுதி) அலுவலகத்தில் தினமும் 30 முதல் 40 பேர் வரை தான் ஓட்டுனர் உரிமம் பெறுவார்கள். அரசு சார்பில் மானிய விலையில் பெண்களுக்கான ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெற கடந்த 29-ந் தேதியில் இருந்து நேற்று வரை 1,184 பெண்கள் இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ளதாக மணப்பாறை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார். நேற்று ஒரே நாளில் மட்டும் 212 பெண்கள் இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ளனர். 

Next Story