திருவத்திபுரத்தில் நிர்வாக சீர்கேடு: நகராட்சி நிர்வாக இயக்குனர் ‘திடீர்’ ஆய்வு


திருவத்திபுரத்தில் நிர்வாக சீர்கேடு: நகராட்சி நிர்வாக இயக்குனர் ‘திடீர்’ ஆய்வு
x
தினத்தந்தி 4 Feb 2018 4:30 AM IST (Updated: 4 Feb 2018 2:07 AM IST)
t-max-icont-min-icon

திருவத்திபுரம் நகராட்சியில் நிர்வாக சீர்கேடு குறித்து புகார் வந்ததை தொடர்ந்து வேலூர் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் விஜயகுமார் ‘திடீர்’ ஆய்வு மேற்கொண்டார்.

செய்யாறு,

திருவத்திபுரம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் நகராட்சி சார்பில் குடிநீர், சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு ஆண்டுகளாக நகராட்சி நிர்வாகத்தில் சீர்கேடு நிலவி வருவதாகவும், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உரிய நேரத்தில் மேற்கொள்ளாமல் அலட்சியமாக அதிகாரிகள் செயல்படுவதாக தொடர்ந்து புகார் வந்தன.

இந்த நிலையில் திருவத்திபுரம் நகராட்சிக்கு வேலூர் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் விஜயகுமார் நேற்று ‘திடீர்’ ஆய்வு மேற்கொண்டார்.

நகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் நுழைந்தவுடன் அங்கிருந்த கழிவறையை பார்த்தபோது தூய்மையின்றி அசுத்தமாக துர்நாற்றம் வீசியது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து ஒவ்வொரு துறை அலுவலர்களை அழைத்து பணிகள் குறித்து விசாரித்து பணியில் உரிய கவனம் செலுத்தவும், பொதுமக்களின் அடிப்படை தேவைகளை துரிதமாக முடிக்க வேண்டும். பொதுமக்களிடம் அரசு திட்டங்கள் விரைவாக சென்றடைய வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து நகராட்சிக்கு வெளியே வந்தபோது ஓப்பந்ததாரர் சம்பத் மற்றும் சிலர் நிர்வாக இயக்குனர் விஜயகுமாரிடம் நகராட்சியில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளுக்கு முறையாக அறிவிப்புகள் வெளியிடுவதில்லை. ஒப்பந்ததாரர் சிலருக்கு மட்டுமே தெரிவித்து மறைமுகமாக பணிகளை வழங்குகின்றனர். நிர்வாகம் சரியாக செயல்படவில்லை என கூறி மனு அளித்தனர். மனுவினை பெற்று கொண்ட அவர் உரிய விசாரணை நடத்தப்படும் என்றார்.

பின்னர் காந்திசாலை, மார்க்கெட் சாலை வழியாக திருவோத்தூர் தர்மராஜா கோவில் தெருவில் தார் சாலை அமைக்கும் பணியையும், செய்யாறு ஆற்றுப் பகுதியில் குப்பை கொட்டுமிடம், நவீன எரிவாயு தகன மேடை ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி சுடுகாடு பகுதி வெளியில் தகனம் செய்வதை தடுத்து நகராட்சி நவீன எரிவாயு தகன மேடையில் மட்டுமே தகனம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் எட்வின் பிரைட் ஜோஸ் (பொறுப்பு), துப்புரவு அலுவலர் பாலசுப்பிரமணியன், துப்புரவு ஆய்வாளர் கே.மதனராசன், பணி மேற்பார்வையாளர் வாசு, இளநிலை உதவியாளர் கீர்த்திவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story