அரசின் மானிய விலை ஸ்கூட்டருக்கு லைசென்சு பெற 12,387 பெண்கள் பதிவு


அரசின் மானிய விலை ஸ்கூட்டருக்கு லைசென்சு பெற 12,387 பெண்கள் பதிவு
x
தினத்தந்தி 4 Feb 2018 4:15 AM IST (Updated: 4 Feb 2018 2:47 AM IST)
t-max-icont-min-icon

மானிய விலையில் ஸ்கூட்டர் பெற லைசென்சு அவசியம் என்பதால் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நடந்த சிறப்பு முகாமில் 7 நாட்களில் 12,387 பெண்கள் பதிவு செய்தனர்.

சேலம்,

கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் பெண்கள் பணியிடங்களுக்கு எளிதில் சென்று வர வசதியாக இருசக்கர வாகனமான ஸ்கூட்டர் வாங்க 50 சதவீதம் மானியம் அல்லது ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கும் திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. தற்போது தகுதியுள்ள பெண்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நாளை (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும்.

இதற்கான விண்ணப்பங்களை சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகராட்சியின் 4 மண்டல அலுவலகங்கள், 4 நகராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள் உள்ளிட்டவைகளில் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் ஓட்டுனர் உரிமம் அவசியம் என்பதால் சேலம் மாவட்டத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கடந்த ஒரு வாரமாக பெண்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் நேற்று விடுமுறை நாளிலும், பெண்களுக்கு லைசென்சு பெறுவதற்கான விண்ணப்பம் செய்து எல்.எல்.ஆர். பெறுவதற்காக சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ரோகிணி சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அங்கு வந்த பெண்களிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேசினார். இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கடேசன், செந்தில்குமார் கலந்து கொண்டனர்.

சேலம் கிழக்கு, தெற்கு ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும், ஓமலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திலும் நேற்று நடந்த சிறப்பு முகாமில் எல்.எல்.ஆர். என்னும் ஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பம் செய்வதற்காக பெண்கள் ஏராளமானவர்கள் திரண்டனர்.

சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் கதிரவன் தலைமையில் எல்.எல்.ஆர். பெற வந்த பெண்களிடம் விண்ணப்பங்களையும், சான்றிதழ்களையும் வாங்கி சரிபார்த்தனர். நேற்று மட்டும் 320 பெண்களுக்கு எல்.எல்.ஆர். வழங்கப்பட்டது.

இதுபோல ஓமலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் எல்.எல்.ஆர். உரிமம் பெற ஓமலூர், தாரமங்கலம், காடையாம்பட்டி வட்டாரத்தில் உள்ள பெண்கள் திரளாக குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங்களை கொடுத்து எல்.எல்.ஆர். பெற்றுக்கொண்டனர். இதுவரை 1,300 பேர் முதல் கட்டமாக எல்.எல்.ஆர். பெற்று சென்றுள்ளதாக மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் தெரிவித்தார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள 6 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், ஓமலூர், வாழப்பாடி ஆகிய 2 மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்கள் ஆகியவற்றில் நேற்று சிறப்பு முகாம் நடத்தப்பட்டு பெண்களிடம் இருந்து ஆவணங்கள் பெறப்பட்டு அவை சரிபார்க்கப்பட்டு எல்.எல்.ஆர். வழங்கப்பட்டன. சேலம் மாவட்டத்தில் கடந்த 7 நாட்களில் 12,387 பெண்கள் பதிவு செய்து, எல்.எல்.ஆர். என்னும் முதல் கட்ட ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

சேலம் மேற்கு-2,418. சேலம் கிழக்கு-1,666. சேலம் தெற்கு-1,089. சங்ககிரி-1,779. மேட்டூர்-1,550. ஆத்தூர்-2,145. ஓமலூர்-1,300. வாழப்பாடி-440.

Next Story