சேலம்: டாஸ்மாக் மேலாளர் மீது வழக்குப்பதிவு


சேலம்: டாஸ்மாக் மேலாளர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 4 Feb 2018 4:45 AM IST (Updated: 4 Feb 2018 2:52 AM IST)
t-max-icont-min-icon

ரூ.2½ லட்சம் பறிமுதல் செய்தது தொடர்பாக டாஸ்மாக் மேலாளர் மீது சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பனமரத்துப்பட்டி,

சேலம் மாவட்டத்தில் மதுக்கடைகளுக்கு மதுபாட்டில்களை சப்ளை செய்யும் குடோன் சேலம் அருகே உள்ள சந்தியூரில் செயல்பட்டு வருகிறது. அங்கேயே டாஸ்மாக் மேலாளர் அலுவலகமும் உள்ளது. இங்கு டாஸ்மாக் மேலாளராக தெய்வநாயகி (வயது 46) என்பவர் பணியாற்றி வருகிறார்.

இதனிடையே டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு குறிப்பிட்ட வகை மதுபாட்டில்களை சப்ளை செய்வதற்கும், அத்துடன் இணைக்கப்பட்டுள்ள பார்கள், மதுக்கடை மற்றும் பார் உரிமையாளரிடம் இருந்தும் மாதந்தோறும் டாஸ்மாக் மேலாளர் தெய்வநாயகி மாமூல் பெற்று வருவதாக சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் டாஸ்மாக் மேலாளர் தெய்வநாயகி அறையில் சோதனை மேற்கொண்டனர். இதில் கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் இருந்ததை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 15-க்கும் மேற்பட்ட பணியாளர்களிடம் விசாரணை நடைபெற்றது. இது தொடர்பாக டாஸ்மாக் மேலாளர் தெய்வநாயகி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்கள் விவரம் வருமாறு, மேற்பார்வையாளர்கள் கேட்காத சில மதுவகைகளை கிடங்கு அதிகாரிகள் டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்புகின்றனர். இதற்காக பெட்டிக்கு ரூ.200 வரை மது தயாரிப்பு நிறுவனங்களிடம் கிடங்கு அதிகாரிகள் மாமூல் பெறுகின்றனர். டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் மாதத்தில் முதல் வாரம் டாஸ்மாக் மேலாளருக்கு மாமூல் வசூலிப்பதும், அதன்படி நேற்று முன்தினம் வசூலித்த பணம் சோதனையில் சிக்கியுள்ளதாகவும், யார்? யாரிடம் எவ்வளவு? பணம் பெறப்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தெய்வநாயகிக்கு, அவருடைய கார் டிரைவர் கண்ணன், டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் கோரிமேடு முருகன், ஜவகர் மில் சுந்தரபாண்டியன் ஆகியோர் மாமூல் தொகையை வசூலித்து கொடுத்துள்ளனர். இவர்கள் 3 பேர் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தெய்வநாயகி மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். சேலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சமீபகாலமாக அரசு அதிகாரிகள் மீதான லஞ்ச புகார் தொடர்பாக அதிரடியாக சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருவது, லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story