16-ந் தேதி பட்ஜெட்டை சித்தராமையா தாக்கல் செய்கிறார் கர்நாடக சட்டசபை 14 நாட்கள் நடைபெறும்


16-ந் தேதி பட்ஜெட்டை சித்தராமையா தாக்கல் செய்கிறார் கர்நாடக சட்டசபை 14 நாட்கள் நடைபெறும்
x
தினத்தந்தி 4 Feb 2018 3:15 AM IST (Updated: 4 Feb 2018 2:52 AM IST)
t-max-icont-min-icon

வருகிற 16-ந் தேதி கர்நாடக பட்ஜெட்டை முதல்-மந்திரி சித்தராமையா தாக்கல் செய்கிறார் என்றும், சட்டசபை 14 நாட்கள் நடைபெறும்

பெங்களூரு,

வருகிற 16-ந் தேதி கர்நாடக பட்ஜெட்டை முதல்-மந்திரி சித்தராமையா தாக்கல் செய்கிறார் என்றும், சட்டசபை 14 நாட்கள் நடைபெறும் என்றும் சபாநாயகர் கே.பி.கோலிவாட் கூறினார்.

கர்நாடக சட்டசபை சபாநாயகர் கே.பி.கோலிவாட் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கவர்னர் வஜூபாய் வாலா


கர்நாடக சட்டசபை கூட்டு கூட்டத்தொடர் நாளை(திங்கட்கிழமை) விதான சவுதாவில் தொடங்குகிறது. இது நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் நாளை கவர்னர் வஜூபாய் வாலா சட்டசபை கூட்டு கூட்டத்தில் உரையாற்றுகிறார். கவர்னர் உரை முடிந்த பிறகு முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். இந்த கூட்டத்தொடர் 9-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும்.

பட்ஜெட் கூட்டத்தொடருக்காக வருகிற 16-ந் தேதி மீண்டும் சட்டசபை கூடுகிறது. அன்றைய தினம் காலை 11.30 மணிக்கு நிதித்துறையை நிர்வகித்து வரும் முதல்-மந்திரி சித்தராமையா 2018-19-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் 28-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறும். ஆகமொத்தம் இந்த மாதம் 14 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும்.

முக்கியமான பிரச்சினைகள்

இத்துடன் சேர்த்து கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து இதுவரை 186 நாட்கள் சட்டசபை கூட்டம் நடந்து இருக்கிறது. இந்த 2 கூட்டத்தொடரிலும் கேள்வி நேரம் இடம் பெறும். கவர்னர் திருப்பி அனுப்பிய, கர்நாடக நகர வளர்ச்சி ஆணைய சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் பெற வேண்டும்.

மாநில சிவில் சேவைகள்(விவசாயம், பணியாளர்கள் துறை) பணி இடமாற்ற மசோதா நிலுவையில் உள்ளது. அரசிடம் இருந்து ஒரு மசோதா வந்துள்ளது. கூட்டம் நடைபெறும் நாட்களில் புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய அனுமதி கோரி அதுபற்றி பரிசீலிக்கப்படும். உறுப்பினர்கள், மாநிலத்தின் முக்கியமான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்கி கொடுக்கப்படும்.

இனிமேல் அனுமதிக்க மாட்டேன்

சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளில் மசோதாக்களை தாக்கல் செய்து விவாதம் இன்றி ஒப்புதல் பெற நான் இனிமேல் அனுமதிக்க மாட்டேன். மசோதாக்கள் மீது விரிவான விவாதம் நடைபெற வேண்டும். அதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பேன். சட்டசபையின் பல்வேறு நிலை குழுக்கள் தங்களின் அறிக்கைகளை தாக்கல் செய்கிறது. அதற்கு உரிய மதிப்பு அளிக்க வேண்டும் என்று மட்டுமே அரசுக்கு என்னால் கூற முடியும்.

விரைவுச்சாலை அமைப்பதில் நைஸ் நிறுவன முறைகேடு குறித்த அறிக்கை உள்பட பல்வேறு அறிக்கைகளில் கூறப்பட்ட அம்சங்கள் அமல்படுத்தப்பட்டது பற்றி என்னிடம் தகவல் எதுவும் இல்லை. சட்டசபை கூட்டங்களில் உறுப்பினர்கள் முழுமையான அளவில் பங்கேற்பது இல்லை என்ற வருத்தம் எனக்கு உள்ளது. ஆனால் பட்ஜெட்டில் கூறப்பட்ட திட்டங்களை அரசு நிறைவேற்றி உள்ளது என்பதில் எனக்கு திருப்தி ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு கே.பி.கோலிவாட் கூறினார்.

Next Story