மடாதிபதி சிவக்குமார சுவாமிக்கு பாரத ரத்னா விருது வழங்குவதில் அரசியல் லிங்காயத் சமுதாய வாக்குகளை கவர போட்டி


மடாதிபதி சிவக்குமார சுவாமிக்கு பாரத ரத்னா விருது வழங்குவதில் அரசியல் லிங்காயத் சமுதாய வாக்குகளை கவர போட்டி
x
தினத்தந்தி 4 Feb 2018 3:00 AM IST (Updated: 4 Feb 2018 2:58 AM IST)
t-max-icont-min-icon

மடாதிபதி சிவக்குமார சுவாமிக்கு பாரத ரத்னா வழங்க பரிந்துரை செய்வதின் மூலம் லிங்காயத் சமுதாய வாக்குகளை கவர அரசியல் கட்சிகள் போட்டா போட்டியிட்டு வருகின்றன.

பெங்களூரு,

மடாதிபதி சிவக்குமார சுவாமிக்கு பாரத ரத்னா வழங்க பரிந்துரை செய்வதின் மூலம் லிங்காயத் சமுதாய வாக்குகளை கவர அரசியல் கட்சிகள் போட்டா போட்டியிட்டு வருகின்றன.

சமுதாய ஓட்டுகளை கவர தீவிரம்

கர்நாடக சட்டசபைக்கு இன்னும் 3 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகின்றனர். மேலும் மாநிலத்தில் உள்ள பல்வேறு சமுதாய ஓட்டுகளை கவர அரசியல் கட்சிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒருபகுதியாக மாநிலத்தில் உள்ள சிறுபான்மை ஓட்டுகளை கவர நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சி வெற்றி பெற்றால் துணை முதல்-மந்திரி பதவி, சிறுபான்மையினர் ஒருவருக்கு வழங்கப்படும் என கட்சியின் மேலிடம் அறிவித்து உள்ளது.

பாரத ரத்னா விருது

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக துமகூருவில் உள்ள சித்தகங்கா மடத்தின் மடாதிபதியான சிவக்குமார சுவாமிக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மாநில பா.ஜனதா தலைவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன் மூலம் மாநிலத்தில் உள்ள 17 சதவீத லிங்காயத் சமுதாய மக்களின் வாக்குகளை அப்படியே கவர பா.ஜனதா கட்சி காய் நகர்த்தி வருகிறது.

மேலும் இந்த கோரிக்கையை ஏற்று கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்பு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்பதால் முதல்-மந்திரி சித்தராமையாவும், சிவக்குமார சுவாமிக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அரசியல் லாபத்திற்காக...

இதன்மூலம் அவருக்கு விருது வழங்கியதில் தங்கள் கட்சிக்கும் பங்கு உள்ளது என்ற பிம்பத்தை காங்கிரஸ் கட்சி ஏற்படுத்த முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. இதேபோல் ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களும், அவருக்கு விருது வழங்கவேண்டும் என வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. லிங்காயத் மக்களின் வாக்குகளை கவர வேண்டும் என்ற அரசியல் லாபத்திற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தற்போது மடாதிபதி சிவக்குமார சுவாமிக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை போட்டா போட்டி கொண்டு வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதேபோல் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது சிவக்குமார சுவாமியின் சாதனைகள் குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி ஆகியோர் பேசலாம் எனவும் கூறப்படுகிறது.

Next Story