மாயமான ‘முச்சத நாயகன்’


மாயமான ‘முச்சத நாயகன்’
x
தினத்தந்தி 4 Feb 2018 11:45 AM IST (Updated: 4 Feb 2018 11:12 AM IST)
t-max-icont-min-icon

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் நிகழ்த்தப்படும் அரிய சாதனைகளில் முச்சதமும் ஒன்று. 141 ஆண்டுகளாக நடந்து வரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 2,900 வீரர்கள் கால் பதித்து விட்டனர். ஆனால் வெறும் 30 முச்சதங்களே அடிக்கப்பட்டுள்ளன. இதற்கு சொந்தக்காரர்கள் 8 நாடுகளைச் சேர்ந்த 26 வீரர்கள் மட்டுமே.

இந்தியாவில் முச்சதத்தை பொளந்து கட்டிய முதல் வீரர் ஷேவாக் என்பது கிரிக்கெட் புள்ளி விவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர்கள் எளிதில் அறிந்த ஒரு விஷயம். 2004-ம் ஆண்டு முல்தானில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் 309 ரன்கள் குவித்தார். அதன் பிறகு கிரிக்கெட் உலகில் சூறாவளியாய் சுழன்றடித்த ஷேவாக் அடுத்த 10 ஆண்டுகளுக்கு பந்து வீச்சாளர்களை குலை நடுங்க வைக்கும் ஒரு அபாயகரமான பேட்ஸ்மேனாக கர்ஜித்தார். 2008-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 319 ரன்கள் விளாசி மேலும் ஒரு மணிமகுடத்தை தனக்குள் இணைத்து கொண்டார்.

சுனில் கவாஸ்கர், சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண், டோனி போன்ற பெரிய ஜாம்பவான்களால் முடியாததை ஷேவாக்குக்கு அடுத்து செய்தவர், இளம் வீரர் கருண் நாயர்.

கர்நாடகாவைச் சேர்ந்த 26 வயதான கருண் நாயர் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 4-வது நாளில் யாரும் எதிர்பாராத வகையில் 32 பவுண்டரி, 4 சிக்சருடன் முச்சதம் (303 ரன்) அடித்து ஆச்சரியப்பட வைத்தார். தனது முதல் சதத்தையே முச்சதமாக மாற்றிய 3 பேரில் இவரும் ஒருவர். அவரது அசாத்தியமான ஆட்டத்தால் இந்தியா சாதனை ஸ்கோராக 759 ரன்களை எட்டிப்பிடித்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் மிடில் வரிசையை வலுப்படுத்த நட்சத்திர வீரர் ஒருவர் உருவெடுத்து விட்டார் என்று புகழ்மாலைகள் சில நாட்கள் அவரை திக்குமுக்காட வைத்தன. ரஞ்சி கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் அதிக ரன்கள் எடுத்தவர் (328 ரன்) என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

மகத்தான ஒரு சாதனையை அரங்கேற்றிய அவருக்கு அடுத்த போட்டியிலேயே (வங்காளதேசத்துக்கு எதிராக) இடம் கிடைக்கவில்லை. காயம் எதுவும் அடையாத ஒரு வீரர் ‘டிரிபிள் செஞ்சுரி’ போட்டு விட்டு மறுபோட்டியிலேயே கழற்றிவிடப்பட்டது அது தான் முதல் முறையாகும். அதனால் விமர்சனங்கள் எழாமலும் இல்லை.

பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் வாய்ப்பு பெற்றார். ஆனால் அவரது பேட்டிங் அப்படியே தலைகீழாக மாற, அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். தற்போது 5-வது வரிசையில் ரஹானே அல்லது ரோகித் சர்மா இருவரில் ஒருவர் ஆடுகிறார்கள்.

ஓராண்டாக தேர்வு குழுவின் கருணை பார்வை கருண்நாயர் மீது படவில்லை. ரசிகர்களும் மறந்து போகும் அளவுக்கு அவரது நிலைமை ஆகி விட்டது. அணி ‘செட்’ ஆனதை வைத்து பார்க்கும் போது இப்போதைக்கு கருண் நாயர் அணிக்குள் நுழைவது கஷ்டமே. ‘அணி நிர்வாகம் மற்றும் தேர்வு குழுவின் முடிவுக்கு மதிப்பு அளிக்கிறேன். ‘ஏ’ அணிக்கான போட்டி மற்றும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி என்னை மேம்படுத்திக்கொள்கிறேன்’ என்று எந்த சலனமும் இன்றி சொல்கிறார், கருண் நாயர். ஐ.பி.எல். ஏலத்தில் அவரை ரூ.5.6 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வாங்கியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவுக்கு கோவில் திருவிழாவுக்காக சென்ற கருண் நாயர், அங்கு பம்பை ஆற்றில் பாம்பு வடிவ படகில் சவாரி செய்த போது விபத்தில் சிக்கிக் கொண்டார். ஆட்கள் அதிகம் ஏற்றப்பட்டதால் அந்த படகு கவிழ்ந்தது. தண்ணீருக்குள் விழுந்து தத்தளித்த கருண்நாயர் கவிழ்ந்த படகை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடினார். பிறகு மீட்பு குழுவின் உதவியுடன் ஒருவழியாக உயிர்பிழைத்து கரை சேர்ந்தார். இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

மிகப்பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்து கரைசேர்ந்த அவரால், இந்திய அணியிலும் வெற்றிகரமான வீரராக கரைசேர முடியுமா என்பதை காலம் தான் கணித்து சொல்ல வேண்டும்.

-ஜெய்பான்

Next Story