கூந்தலுக்கு வெங்காயம்


கூந்தலுக்கு வெங்காயம்
x
தினத்தந்தி 4 Feb 2018 4:15 PM IST (Updated: 4 Feb 2018 2:34 PM IST)
t-max-icont-min-icon

முடி உதிர்வு பிரச்சினைக்கு வெங்காயத்தை ஜூஸாக தயாரித்து கூந்தலில் தடவி வரலாம். இது முடி உதிர்வை கட்டுப்படுத்துவதோடு கூந்தல் வளர்ச்சிக்கும் துணை புரியும்.

வீட்டிலேயே எளிய முறையில் வெங்காயத்தை பயன்படுத்தி கூந்தலை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகளை பார்ப்போம்.

* வலுவான, அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு கந்தகம் முக்கியமான ஊட்டச்சத்தாக விளங்குகிறது. இது வெங்காயத்தில் அதிகம் இருப்பதால் முடி வளர்ச்சியை தூண்டி, முடி இழப்பை தடுக்கிறது. மேலும் வெங்காய சாறு மயிர்கால்களுக்கு ஊட்டமளிக்கும். பொடுகு பிரச்சினைக்கும் தீர்வளிக்கும்.


* வெங்காயத்தை நான்கு துண்டுகளாக வெட்டி அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் வெங்காய சாறை தலைமுடியில் தேய்த்து நன்கு மசாஜ் செய்ய வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு கூந்தலை அலச வேண்டும். வெங்காய வாசம் வீசுவதை ஷாம்பு கட்டுப்படுத்தும். தொடர்ந்து இரண்டு மாதங்கள் வாரம் ஒருமுறை வெங்காய சாறை பயன்படுத்தி வந்தால் கூந்தல் நன்றாக வளர்ச்சியடையும்.

*  வெங்காய சாறுடன் தேன் கலந்தும் பளபளப்பான கூந்தலை பெறலாம். கால் கப் வெங்காய சாறுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து மயிர்கால்களில் இதமாக தடவ வேண்டும். அரை மணி நேரம் கழித்து ஷாம்பு கொண்டு கூந்தலை அலசி வர வேண்டும்.

* ஆலிவ் ஆயில் மயிர்கால்களில் ஊடுருவி கூந்தலை வலுப்படுத்தும் தன்மை கொண்டது. மூன்று டேபிள் ஸ்பூன் வெங்காய சாறுடன் ஒன்றரை தேக் கரண்டி ஆலிவ் எண்ணெய்யை கலந்து கூந்தலில் மசாஜ் செய்ய வேண்டும். இரண்டு மணி நேரம் கழித்து கூந்தலை அலசிவிட வேண்டும். பொடுகு இல்லாத கூந்தலை தக்கவைப்பதற்கும் ஆலிவ் ஆயில் துணை புரியும்.

* கூந்தலை வலுப்படுத்தி முடி வளர்ச்சியை அதிகரிக்க கருவேப்பிலையை பயன்படுத்தலாம். கறிவேப்பிலையை தண்ணீரில் அரைத்து வெங்காய சாறுடன் கலந்து கூந்தலில் தடவிக்கொள்ள வேண்டும். ஒருமணி நேரம் கழித்து ஷாம்பு கொண்டு அலசிவிட வேண்டும்.

Next Story