முதல் பெண் போட்டோகிராபரின் கவனிப்பாரற்ற கடைசி காலம்..


முதல் பெண் போட்டோகிராபரின் கவனிப்பாரற்ற கடைசி காலம்..
x
தினத்தந்தி 4 Feb 2018 3:30 PM IST (Updated: 4 Feb 2018 3:04 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் முதல் பெண் புகைப்படக் கலைஞர் என்ற பெருமைக்குரியவர் ஹோமை வியாராவாலா. குஜராத் மாநிலத்தில் பிறந்தவர்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னும், பின்னும் இவரால் எடுக்கப்பட்ட ஒவ்வொரு புகைப்படமும் இந்திய ஒளிப்பட வரலாற்றின் பொக்கிஷங்களாகும். ஆனால் அவரது காலத்தில் அவை அதிகம் கண்டுகொள்ளப்படாத புகைப்படங்களாகவே இருந்துள்ளன. அவரையும் பலரும் அறிந்ததில்லை. அவர் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே அவரது புகைப்படங்களையும், அவரது திறமையையும் பாராட்டி அரசு விருது வழங்கியது.

புகைப்பட வரலாற்றில் முதல் பெண் போட்டோகிராபராக ஹோமை வியாராவாலா உருவான கதையை அறிவோம்!

ஹோமை பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு கேமரா ஆர்வத்தை வளர்த்தவர் அவரோடு படித்த சக மாணவர் மானெக் ஷா என்பவராவார். அவரிடம் இருந்த கேமராவை வாங்கி பொழுதுபோக்காக போட்டோ எடுத்தார், ஹோமை. அவர் எடுத்த படங்கள் பத்திரிகைகளில் வெளிவந்தது. தக்க சன்மானமும் கிடைத்தது. அது அவருடைய ஆர்வத்தை தூண்டியது. காலப் போக்கில் புகைப்படம் எடுப்பதில் சிறந்த நுணுக்கங்களை கற்றுக்கொண்டார். பெண்களை பள்ளிக் கூடத்திற்கே அனுப்பாத அந்தக் காலத்திலேயே மும்பையில் புகழ்பெற்ற ஜெ.ஜெ.ஆர்ட்ஸ் கல்லூரியில் பட்டயப் படிப்பைமுடித்தார். பள்ளிப் பருவத்தில் தனக்கு கேமரா கொடுத்து ஊக்குவித்த சக மாணவர் மானெக் ஷாவையே பிற்காலத்தில் திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இங்கிலாந்து தூதரகத்தின் செய்திப் பிரிவில் போட்டோகிராபர் வேலை கிடைத்தது.

பெண்களுக்கே உரித்தான அழகுடனும், அடக்கத்துடனும் ஆண்களுக்கு மத்தியில் ஹோமை பணியில் ஈடுபட்டார். இரண்டு தோள்களிலும் ‘ரோலி பிளக்ஸ்’ கேமராவை மாட்டிக் கொண்டு நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து, காத்திருந்து அவர் படம் எடுத்தவிதம் அனைவரையும் ஈர்த்தது. இந்திய விடுதலைக்கு முன்பான ஆயத்த நிலையையும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலகம் மற்றும் கலவரங்களையும் துணிச்சலுடன் சென்று போட்டோ எடுத்தார். அந்தக் கலையில் அவருக்கிருந்த ஆர்வம் பலவிதமான ஆபத்துகளையும் எதிர்கொள்ளும் தைரியத்தை கொடுத்திருந்தது.

இந்தியா சுதந்திரம் பெற்ற முதல் நொடி தொடங்கி, டெல்லி செங்கோட்டையில் நடந்த கொடியேற்றம் வரை அனைத்து நிகழ்ச்சிகளையும் தேச உணர்வோடு ஹோமை படம்பிடித்தார். அப்போது மக்களிடம் ஏற்பட்ட தேச உணர்வு காட்சிகளையும், அப்போதைய அரசியல் தலைவர்களின் சந்திப்புகளையும் உடனிருந்து படம் எடுத்தார்.

இன்று தெருவுக்கொரு புகைப்பட ஸ்டூடியோவுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் புகைப்படம் என்பதே மிகவும் அபூர்வமான விஷயம். அக்காலத்தில் மன்னர்களும், பிரபுக்களும் ஓவியர்களை தங்கள் அரண்மனைக்கு வரவழைத்து தங்கள் உருவங்களை பிரமாண்டமான தோற்றத்தில் வரைந்து அரண்மனைக்குள் அனைவரும் பார்க்கும்படி வைத்திருந்தார்கள். ஓவியங்களை வரைந்து பூர்த்தி செய்ய நீண்ட காலம் தேவைப்பட்டது. கால்கடுக்க பலமணி நேரம் ஆடாமல் அசையாமல் மன்னர்களும், பிரபுக்களும் நிற்க வேண்டியிருந்தது. சில ஓவியங்களை வரைய மாதங்களானது. இதனால் சில ஓவியப் பணிகள் பாதியிலேயே நின்றுபோனது. பிற்காலத்தில் கேமரா அறிமுகமான பின்புதான் விதவிதமாக போட்டோக்களை எடுக்க முடிந்தது. அந்த கேமரா வரலாற்றில் ஹோமை இடம்பிடித்துவிட்டார்.

இந்திய கடைசி வைசிராய் மவுண்ட் பேட்டன் பிரபு கவர்னர் ஜெனரலாக பதவியேற்ற தருணம், இந்திய பிரதமராக நேரு பதவி ஏற்றுக் கொண்டது, லால் பகதூர் சாஸ்திரியின் இறுதி நிமிடங்கள், இரண்டாம் உலகப் போருக்கான தயாரெடுப்புகள் போன்றவைகள் எல்லாம் அவரால் வரலாற்று பதிவுகளாகின. ஜாக்குலின் கென்னடி மற்றும் தலாய்லாமா ஆகியோர் நேரு குடும்பத்தோடு நெருங்கிய நட்பு கொண்டிருந்ததால் இவர் எடுத்த புகைப்படங்கள் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது. சுதந்திர இந்தியாவிற்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்து சொல்ல வந்த பன்னாட்டு தலைவர்கள் அனைவரையும் ஹோமை படம் எடுத்தார்.

முக்கியமான தலைவர்கள், பிரபலங்கள் பலரையும் படம் எடுத்த அவருக்குள் ஒரு வருத்தம் இருந்தது. மகாத்மா காந்தியின் இறுதி நொடிகளை படம் எடுக்க முடியாமல் போனதுதான் அந்த வருத்தம். அவரது வாழ்நாளில் மிகப்பெரிய இழப்பாக அதை கருதினார். ஆனால் அதை ஈடு செய்யும் விதமாக காந்தியின் அஸ்தியை கரைப்பதற்காக கொண்டு சென்றபோது அவர் எடுத்த புகைப்படங்கள் சாகா வரம் பெற்றவையாகின. ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் காந்திஜியின் அஸ்தியைக் காண குவிந்திருந்த மக்களையும், அவர்களது உணர்வுகளையும் புகைப்படம் எடுத்தார்.

ஹோமை எடுத்த எண்ணற்ற புகைப்படங்கள் இந்தியா மற்றும் பல வெளிநாட்டு இதழ்களில் அவ்வப்போது பிரசுரமானது. அப்படி வெளியான இவரது புகைப்படங்கள் யாவும் ‘டால்டா-13’ என்ற புனைப் பெயரில் தான் வெளியிடப்பட்டது. ஹோமை வைத்திருந்த காரின் பதிவு எண் டி.எல்.டி.13 என்ற நம்பர் பிளேட்டின் அடிப்படையில் புனைப்பெயரை அவர் உருவாக்கிக் கொண்டார். தலைவர்களை மட்டுமின்றி சாதாரண மக்களையும் படம்பிடித்தார். அதற்காக சைக்கிளில் டெல்லி முழுவதும் வலம் வருவார். கிடைக்கும் அபூர்வ காட்சிகளை படம் பிடித்துக் கொள்வார். டெல்லி பாராளுமன்றத்தின் புகைப் பட கலைஞர்களுக்கான சங்கத்தை இவர்தான் நிறுவினார்.

ஹோமை, கணவரின் மறைவிற்கு பிறகு புகைப்படம் எடுப்பதை நிறுத்திக் கொண் டார். சுதந்திர இந்திய வரலாற்றை புகைப்படமாக ஆவணப்படுத்திக் கொடுத்த இவருக்கு போதுமான அங்கீ காரம் கிடைக்கவில்லை. பின்பு தன் சொந்த ஊருக்கு சென்று எளிமையாக வாழ்ந்தார். அவர் வசித்த வீட்டின் பக்கத்து வீட்டுக்காரர் தவிர யாருக்கும் இவரைத் தெரியவில்லை. தனிமையிலிருந்த ஹோமை, தன்னிடமிருந்த முக்கிய போட்டோக்களை எல்லாம் இனி இது யாருக்கும் பயனில்லை என கருதி வீதியில் தூக்கி எறிந்துவிட்டார். பிறகு தனது செயலுக்காக தன் சுயசரிதையில் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். மத்திய அரசு காலம் கடந்து 2011-ம் ஆண்டில் பத்ம விபூஷண் விருதை இவருக்கு வழங்கியது. அந்த நேரம் அவர் தன்னை புதுப்பித்துக் கொண்டதாக அறிவித் தார். இவர் 2012-ம் ஆண்டு காலமானார்.

Next Story