கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது; பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியது அம்பலம்


கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது; பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியது அம்பலம்
x
தினத்தந்தி 5 Feb 2018 4:30 AM IST (Updated: 5 Feb 2018 12:30 AM IST)
t-max-icont-min-icon

லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, பேராசிரியர்கள் நியமனத்தில் பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியது விசாரணையில் அம்பலமாகி இருக்கிறது.

கோவை, பிப்.5-

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக பதவி வகித்தவர் கணபதி (வயது 67).

அந்த பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரியும் சுரேஷ் (41), தனக்கு இணை பேராசிரியராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று துணைவேந்தர் கணபதியிடம் கேட்டு உள்ளார். அப்போது, பதவி உயர்வு வழங்க துணைவேந்தர் கணபதி ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டதால், அதுகுறித்து சுரேஷ் நேற்று முன்தினம் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து போலீசார் சுரேஷிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.1 லட்சம் மற்றும் ரூ.29 லட்சத்துக்கான பின்தேதியிட்ட 4 காசோலைகளை கொடுத்தனர்.

பின்னர், துணைவேந்தரின் வீட்டுக்கு சென்று சுரேஷ் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகள் மற்றும் காசோலைகளை துணைவேந்தர் கணபதியிடம் கொடுத்த போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கணபதியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜ் என்பவரையும் அவர்கள் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து துணைவேந்தர் கணபதியின் வீடு, பல்கலைக்கழகத்தில் உள்ள அவரது அறைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர். இதில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் ரகசிய டைரியும் சிக்கியது. அதில் எந்தெந்த பணியிடங்களுக்கு எவ்வளவு பணம் யார்-யாரிடம் இருந்து வாங்கப்பட்டது என்பன போன்ற விவரங்கள் இடம் பெற்று இருந்தன. அவரது வீட்டில் சோதனை நடத்தியதில் ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் தங்க நகைகள் இருந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றவில்லை.

இதேபோல் பேராசிரியர் தர்மராஜின் பல்கலைக்கழக அலுவலகம், கோவை வேலாண்டிப்பாளையத்தில் உள்ள அவரது வீடு உள்பட பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். 14 மணி நேர விசாரணை முடிந்து துணைவேந்தர் மற்றும் பேராசிரியர் இருவரையும் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் நீதிபதி முன்பு போலீசார் ஆஜர்படுத்தினார்கள்.

அப்போது அவர்கள் இருவரையும் வருகிற 16-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து துணைவேந்தர் கணபதி கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

கைதான துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் சார்பில் நேற்று முன்தினம் இரவே நீதிபதியிடம் வக்கீல் பாஸ்கரன் மூலம் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு (நாளை) ஒத்திவைத்தார்.

துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்ட பிரிவு 7, 13(1) (டி) மற்றும் 12 மற்றும் இந்திய தண்டனை சட்ட பிரிவு 109 (குற்றத்துக்கு தூண்டுதல்) ஆகியவற்றின் கீழ் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இருவர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து பணியிடை நீக்கம் செய்யவும் பரிந்துரை செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

கைதான கணபதியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் பல மணி நேரம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. கணபதி துணைவேந்தராக பதவி ஏற்றது முதல் அடுக்கடுக்கான புகார்கள் அவர் மீது கூறப்பட்டு வந்தன. இவர் பதவி ஏற்ற சில மாதங்களிலேயே பல்கலைக்கழகத்தின் 28 துறைகள் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் காலியாக இருந்த பேராசிரியர் பணியிடங்கள் உள்பட 82 பணியிடங்களுக்கான நியமன அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த நியமனத்தில் பல்கலைக்கழக விதிமுறைகள் மீறப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து, பணியிடங்கள் நிரப்புவதை நிறுத்தி வைக்குமாறு உயர் கல்வித்துறை செயலாளார் மூலம் உத்தரவிடப்பட்டது. அதையும் மீறி துணைவேந்தர் கணபதி சிண்டிகேட் கூட்டத்தை கூட்டி பணியிடங்களுக்கு பேராசிரியர்களை நியமித்தார். இந்த பணியிடங்களை நிரப்பியதன் மூலம் துணைவேந்தர் கணபதி பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியது விசாரணையில் அம்பலமாகி இருக்கிறது.

துணைவேந்தர் கணபதி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்ததால் கடந்த 4 மாதங்களாகவே லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதில் பேராசிரியர்கள் நியமனம் மற்றும் பல்வேறு பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதில் சில பேராசிரியர்கள் கமிஷன் அடிப்படையில் அவருக்கு உதவி செய்து வந்தது தெரியவந்தது.

இந்த நிலையில் தான் உதவி பேராசிரியர் சுரேஷிடம், பதவி உயர்வுக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியபோது துணைவேந்தர் கணபதி கையும், களவுமாக நேற்று முன்தினம் பிடிபட்டார். அந்த பணத்தை வாங்கி கொடுப்பதற்கு உதவிய பேராசிரியர் தர்மராஜும் சிக்கினார்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ராஜேஷ், தட்சிணாமூர்த்தி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்குனர் (பொறுப்பு) மதிவாணன் (47) என்பவரும் உடந்தையாக இருந்தது தெரியவந்து உள்ளது. இதைத்தொடர்ந்து அவருடைய பெயரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் முதல் தகவல் அறிக்கையில் சேர்த்து உள்ளனர். மதிவாணன் மீது இந்திய தண்டனை சட்டம் 109 (குற்றத்துக்கு தூண்டுதல்) என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

கடந்த 2016-ம் ஆண்டு முதல் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட நேரடியான நியமனங்களில் விதிமீறல்கள் ஏதும் உண்டா? லஞ்சம் வாங்கி பணியிடங்கள் நிரப்பப்பட்டனவா? என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். மேலும் துணைவேந்தர் அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கு லஞ்ச குற்றச்சாட்டுகள் குறித்து தெரியுமா? என்றும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.

எனவே இந்த விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என தெரிகிறது.

நேற்று முன்தினம் துணைவேந்தர் லஞ்சப்பணம் ரூ.1 லட்சத்தை வாங்கியவுடன் அதில் ரசாயன பவுடர் தடவியிருப்பதை பார்த்து விட்டார். உடனே தன்னை பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் வந்துவிட்டனர் என்று தெரிந்ததும் உடனடியாக தான் வாங்கிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் சிலவற்றை வேகமாக கழிவறைக்கு கொண்டு போய் கிழித்து போட்டார். அதற்கு அவருடைய மனைவி சொர்ணலதா (57) உதவி செய்துள்ளார். உடனே லஞ்ச ஒழிப்பு போலீசார் அந்த கழிவறையை உடைத்து அதில் கிழித்து போட்ட 28 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை கைப்பற்றினார்கள்.

இதைத்தொடர்ந்து தடயங்களை அழிக்க உதவியதாக துணைவேந்தர் கணபதியின் மனைவி சொர்ணலதாவிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். விசாரணையின் முடிவில் வழக்கில் அவரையும் சேர்க்க திட்டமிட்டு உள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

துணைவேந்தர் கணபதி வீட்டில் இருந்து பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதால் தங்களையும் போலீசார் விசாரணைக்கு அழைப்பார்களா? தங்களது பணிக்கு பாதிப்பு ஏதாவது ஏற்படுமா? என்று அவரிடம் பணம் கொடுத்து வேலைக்கு சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

யார்-யாரிடம் இருந்து எவ்வளவு லஞ்சம் வாங்கினார் என்பது பற்றிய அறிய துணைவேந்தர் கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜ் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்து உள்ளனர். அவர்கள் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யவும் வாய்ப்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் பல்கலைக்கழகங்களில் நடந்த கட்டுமான பணிகள், பிற துறை ஊழியர்கள் நியமனம் போன்றவற்றிலும் துணைவேந்தர் கணபதி முறைகேட்டில் ஈடுபட்டாரா? என்றும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த ராதாகிருஷ்ணன் மீது மேஜை, நாற்காலி உள்பட உபகரணங்கள் வாங்கியதாக ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் மீது கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் கடந்த 2016-ம் ஆண்டு ராதாகிருஷ்ணனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதன்பேரில் அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

இதே போன்று கோவை விவசாய பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தராக இருந்த முருகேச பூபதி மீது டிராக்டர் மற்றும் விவசாய பயன்பாட்டு கருவிகள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தற்போது கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி லஞ்ச வழக்கில் கைதாகி உள்ளார்.

இதற்கிடையே கோவை பாரதியார் பல்கலைக்கழக நிறுவனர் நாள் விழா இன்று (திங்கட்கிழமை) நடைபெறுவதாக இருந்தது.

இதில் துணைவேந்தர் கணபதி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொள்ள இருந்தனர். தற்போது துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டதால், இந்த விழா தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. 

Next Story