எந்த தேர்தல் வந்தாலும் ஜெயிப்பது உறுதி: அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி


எந்த தேர்தல் வந்தாலும் ஜெயிப்பது உறுதி: அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 5 Feb 2018 4:45 AM IST (Updated: 5 Feb 2018 12:51 AM IST)
t-max-icont-min-icon

எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. வெற்றி என்ற கவச குண்டலத்துடன் பிறந்த இயக்கம் அ.தி.மு.க. என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை,

மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு விண்ணப்பப் படிவங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சியை அழிக்கவும், ஒழிக்கவும் கருணாநிதி வழியில் அவரது மகன் ஸ்டாலின் துடித்து கொண்டு இருக்கிறார். அவரது கனவு ஒருபோதும் பலிக்காது. உறுப்பினர் சேர்க்கை குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் பன்னீர் செல்வமும் ஆலோசனை வழங்கி உள்ளனர். அதன்படி செயல்பட வேண்டும்.

அ.தி.மு.க. உறுப்பினர் அட்டை என்பது நமக்கு உயிர் போன்றது. எனவே இதனை பத்திரமாக வைத்து கொள்ளுங்கள். உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் ஏதாவது உதவியோ, அரசின் சலுகையோ வேண்டுமென்றால் இந்த அட்டை மிக அவசியமானதாகும். இதனை பட்டவர்த்தமாக கூறுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.விற்கு என்று கொள்கை உள்ளது. அந்த கொள்கைபடி செயல்படுவோம். யாருக்காவும், அந்த கொள்கையை விட்டு கொடுக்க மாட்டோம். கமலாஹசன் மக்களை நேரடியாக சந்திக்க வரும் போது தான் மக்களின் பிரச்சினை தெரியும். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் திரைத்துறையில் இருந்து கொண்டே அரசியலிலும் ஈடுபட்டார்கள். இரண்டு துறைகளிலும் வெற்றி பெற்றார்கள். எனவே அவர்களை போல் மற்ற நடிகர்களை ஓப்பிட்டு பார்க்க கூடாது.

வருகின்ற உள்ளாட்சி தேர்தல், பாராளுமன்ற தேர்தல் என அனைத்திலும் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. கண்ணன் கவச குண்டலத்துடன் பிறந்தது போல, வெற்றி என்ற கவச குண்டலத்துடன் தான் அ.தி.மு.க. இயக்கம் பிறந்து இருக்கிறது. எனவே தோல்வி என்பது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story