ஏ.டி.எம். கொள்ளை கும்பல் தலைவனை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு, ரூ.24 லட்சத்தை மீட்க போலீசார் நடவடிக்கை


ஏ.டி.எம். கொள்ளை கும்பல் தலைவனை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு, ரூ.24 லட்சத்தை மீட்க போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 5 Feb 2018 3:15 AM IST (Updated: 5 Feb 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

கோவை ஏ.டி.எம். கொள்ளையில் பறிபோன ரூ.24 லட்சத்தை மீட்க, கொள்ளை கும்பல் தலைவனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கோவை,

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் உள்ள 2 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கடந்த டிசம்பர் மாதம் 10-ந் தேதி ரூ.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக வடமாநிலத்தை சேர்ந்த மோஷம்கான், அமீன், சுல்பிஹீர், அமித்குமார், சுபேர், முபாரக், முஸ்தாக், மற்றொரு சுபேர் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அந்த கும்பலின் தலைவன் அரியானா மாநிலத்தை சேர்ந்த இஸ்லாமுதீன்(43) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கைது செய்யப்பட்டார்.

பின்னர் இஸ்லாமுதீனை தனிப்படை போலீசார் கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதைத்தொடர்ந்து இஸ்லாமுதீனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

ஏ.டி.எம்.கொள்ளை கும்பல் தலைவன் இஸ்லாமுதீனை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். கோவையில் ஏ.டி.எம்.களை உடைத்து கொள்ளையடித்த பணத்தில் இது வரை ரூ.6 லட்சம் தான் கைப்பற்றப்பட்டுள்ளது. மீதி ரூ.24 லட்சம் குறித்த தகவல்கள் இஸ்லாமுதீனுக்கு தான் தெரியும் என்பதால் அது பற்றி விசாரித்து மீட்க வேண்டியது உள்ளது.

இஸ்லாமுதீன் கும்பலில் உள்ள மற்ற கொள்ளையர்களின் உதவியுடன் தமிழகத்தில் வேறு எங்கும் கைவரிசை காட்டி இருக்கிறார்களா? என்றும், இஸ்லாமுதீனுக்கு தமிழகத்தில் உதவி செய்தவர்கள் யார்? என்பன உள்பட பல்வேறு தகவல்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டியது உள்ளது.

இத்தகைய தகவல்கள் இஸ்லாமுதீனை காவலில் எடுத்து விசாரித்தால் தான் தெரியவரும் என்பதால் இந்த வாரத்தில் அதற்கான மனுவை போலீசார் கோவை கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர். இஸ்லாமுதீனை காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் பல தகவல்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

கோவையில் ஏ.டி.எம்.களை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட போது கொள்ளை கும்பல் தலைவன் இஸ்லாமுதீன், அவருடைய காதலி கிரண் ஆகியோரும் கோவையில் இருந்துள்ளனர். கொள்ளையடிக்கப் பட்ட பணத்தில் ரூ.27 லட்சத்துடன் அவர்கள் 2 பேரும் விமானத்தில் வடமாநிலத்துக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது. எனவே கொள்ளை போன பணத்தின் ஒரு பகுதி கிரணிடம் இருக்கலாம் என்று கோவை போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே அந்த பணத்தை கைப்பற்றுவதற்காக கிரணிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். 

Next Story