போலியாக அனுமதி சீட்டு தயாரித்து லாரியில் மணல் கடத்திய டிரைவர் சிக்கினார்


போலியாக அனுமதி சீட்டு தயாரித்து லாரியில் மணல் கடத்திய டிரைவர் சிக்கினார்
x
தினத்தந்தி 5 Feb 2018 1:44 AM IST (Updated: 5 Feb 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

போலியாக அனுமதி சீட்டு தயாரித்து லாரியில் மணல் கடத்திய டிரைவரை சிறுபாக்கம் போலீசார் கைது செய்தனர்.

சிறுபாக்கம்,

சிறுபாக்கம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள சோதனை சாவடியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலையில் சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்துமாறு போலீசார் சைகை காண்பித்தனர்.

ஆனால் டிரைவர் நிற்காமல் லாரியை வேகமாக ஓட்டிச்சென்றார். இதையடுத்து போலீசார் காவல்துறை வாகனத்தில் அந்த லாரியை பின்தொடர்ந்து துரத்திச்சென்றனர். அரசங்குடி காப்புக்காடு அருகே சென்றபோது அந்த லாரியை போலீசார் மடக்கி பிடித்தனர். அந்த லாரியில் மணல் இருந்தது.

இதையடுத்து அந்த மணலை கொண்டு செல்வதற்கான அனுமதி சீட்டு உள்ளதா? என்று போலீசார் கேட்டனர். உடனே டிரைவர் அனுமதி சீட்டு ஒன்றை கொடுத்தார். அந்த அனுமதி சீட்டை பார்த்தும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

ஏனெனில் அந்த அனுமதி சீட்டு சென்னை கனிமம் மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறையால் வழங்கப்பட்டது போன்ற போலியாக தயாரித்து இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், நாமக்கல் மாவட்டம் செவந்திபட்டி கிராமத்தை சேர்ந்த சக்திவேல்(வயது 40) என்பதும், போலியாக அனுமதி சீட்டு தயாரித்தும், லாரியில் போலி நம்பர் பிளேட் வைத்தும் மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து சக்திவேலை போலீசார் கைது செய்தனர். மேலும் லாரி உரிமையாளரான பாலசிங்கத்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டது. 

Next Story