ஊத்துக்குளி அருகே பாலத்தின் தடுப்பு சுவரில் மோதிய லாரிகள்


ஊத்துக்குளி அருகே பாலத்தின் தடுப்பு சுவரில் மோதிய லாரிகள்
x
தினத்தந்தி 5 Feb 2018 2:45 AM IST (Updated: 5 Feb 2018 2:08 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்குளி அருகே பாலத்தின் தடுப்பு சுவரில் லாரிகள் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டிரைவர்கள் உயிர் தப்பினார்கள்.

ஊத்துக்குளி,

புனேவில் இருந்து புது கார்களை ஏற்றிக் கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் செங்கப்பள்ளி வழியாக கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரிக்கு பின்னால் மேட்டூரில் இருந்து சாம்பல் பாரம் ஏற்றிக்கொண்டு மற்றொரு லாரி கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே சாம்பல் பாரம் ஏற்றி வந்த லாரி டிரைவர், கன்டெய்டனர் லாரியை முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக சாம்பல் பாரம் ஏற்றி வந்த லாரியின் டயர் வெடித்தது. இதனால் நிலை தடுமாறிய அந்த லாரி, கன்டெய்னர் லாரி மீது மோதியது. பின்னர் 2 லாரிகளும் அங்கிருந்த பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி நின்றன.

பாலத்தில் இருந்து லாரிகள் கீழே விழுந்து இருந்தால் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும். ஆனால் அதிர்ஷ்டவசமாக 2 லாரிகளும் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி நின்று விட்டன. இதையடுத்து 2 லாரிகளில் இருந்த டிரைவர்களும் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள். இந்த விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தின் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

Next Story