லஞ்சம் வாங்கி குவித்த பணத்தில் மகளுக்காக மருத்துவமனை கட்டிய துணைவேந்தர் கணபதி


லஞ்சம் வாங்கி குவித்த பணத்தில் மகளுக்காக மருத்துவமனை கட்டிய துணைவேந்தர் கணபதி
x
தினத்தந்தி 5 Feb 2018 4:30 AM IST (Updated: 5 Feb 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

லஞ்சம் வாங்கி குவித்த பணத்தில் துணைவேந்தர் கணபதி திருச்சியில் வீட்டின் அருகில் மகளுக்காக மருத்துவமனை கட்டி வந்தது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

திருச்சி,

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கணபதி, அதே பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் சுரேஷ் என்பவரின் பதவி உயர்வுக்காக ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட கணபதியின் சொந்த ஊர் திருச்சி மாவட்டம் துறையூர் பக்கம் உள்ள நடுவலூர் ஆகும். கணபதி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறை தலைவராக 15 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் தான் அவர் கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அவர் தாவரவியல் துறை தலைவராக பணியாற்றியபோது திருச்சி நவல்பட்டு அண்ணாநகரில் வீடு கட்டி அதில் குடியிருந்து வந்தார். கோவைக்கு அவர் மாறுதலாகி சென்ற பின்னர் திருச்சி வீட்டை பூட்டி வைத்திருந்தார். தற்போது கணபதி லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பதால், நேற்று முன்தினம் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கேட்டுக்கொண்டதற்கு இணங்க திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் நவல்பட்டில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையின்போது கணபதியின் உறவினர் ஒருவர் அருகில் இருந்தார். அந்த வீட்டில் இருந்து 3 முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றி சென்றனர்.

இந்த சோதனையில் வீட்டின் அருகிலேயே கணபதி மருத்துவமனை நடத்துவதற்காக கட்டிடம் கட்டி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. கணபதியின் மகள் டாக்டராக இருப்பதால் அவருக்காக இந்த கட்டிடத்தை அவர் கட்டியதாக அருகில் உள்ளவர்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தெரிவித்தனர். இதுபற்றிய தகவல்களையும் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார், கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தெரிவித்து உள்ளனர்.


துணைவேந்தர் கணபதி முக்கிய அரசியல் கட்சி தலைவர் ஒருவருடன் மிக நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தி வைத்திருந்தாராம். அந்த தலைவர் மூலம் தான் அவர் துணைவேந்தர் பதவிக்கு தேர்வானதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் திருச்சியை சேர்ந்த சில தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்களிடமும் லட்சக்கணக்கில் பணம் வாங்கி உள்ளார். அவருக்கு பணம் கொடுத்தவர்கள் தங்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணைக்கு வருவார்களோ? என்ற அச்சத்தில் உள்ளனர்.


Next Story