ரஜினிகாந்த் தெளிவான சிந்தனையுடன் அரசியல் பயணம் செய்கிறார் அர்ஜுன் சம்பத் பேச்சு


ரஜினிகாந்த் தெளிவான சிந்தனையுடன் அரசியல் பயணம் செய்கிறார் அர்ஜுன் சம்பத் பேச்சு
x
தினத்தந்தி 5 Feb 2018 4:30 AM IST (Updated: 5 Feb 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் ரஜினிகாந்த் தெளிவான சிந்தனையுடன் அரசியல் பயணம் செய்கிறார் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.

கரூர்,

இந்து மக்கள் கட்சியின் கரூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் கரூர்- கோவை சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கரூர் மாவட்ட தலைவர் மணி தலைமை தாங்கினார். மாநில நிலைக்குழு உறுப்பினர் சுரேஷ், மாவட்ட செயலாளர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன்சம்பத் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்து இந்துக்கள் மனதை பெரிதும் பாதித்துள்ளது. இந்து கோவில்கள் இந்து அறநிலையத்துறையின் கீழ் செயல்படுகிறது. இதை மாற்றி விட்டு அறங்காவலர் குழு தலைவர்கள், கோவில் தர்மகர்த்தா இவர்கள் கட்டுப்பாட்டில் செயல்பட வழிவகுக்க வேண்டும். வருகிற 7-ந் தேதி (புதன்கிழமை) இந்து மக்கள் மற்றும் பொதுமக்களை திரட்டி மதுரை மீனாட்சியம்மன் கோவில் சன்னதியில் தீவிபத்துக்கான உண்மை காரணத்தை கண்டறியக்கோரி உண்ணாவிரதம் நடைபெற உள்ளது. வருகிற 14-ந் தேதி கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தை பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்க கோரி அங்கு அஞ்சலி செலுத்துகிறோம்.

இந்திய அரசு மகாசிவராத்திரி தினத்தை அரசு பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும். நடிகர் ரஜினிகாந்த் தெளிவான சிந்தனையுடன் அரசியல் பயணம் செய்து வருகிறார். இயக்கம் ஆரம்பித்த ஒரே நாளில் 20 லட்சம் பேர் உறுப்பினர்களாக பதிந்துள்ளனர். அவர் கட்சியின் கொள்கை கோட்பாடுகள் பற்றி விவரங்களை கட்சி ஆரம்பிக்கும் போது தெளிவுபடுத்துவார். வரும் சட்டமன்ற தேர்தலுக்கு பின் அவர் தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

முடிவில் கரூர் நகர செயலாளர் ஈஸ்வரன் நன்றி கூறினார். 

Next Story