கற்கும் திறனை மேம்படுத்தும் விளையாட்டுடன் கூடிய பயிற்சிகள்!
அக்கறையுள்ள ஆசிரியர்கள் மாணவர்கள் மீது காட்டும் கனிவான வழிநடத்தலே அவர்களை வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்கிறது.
மாணவர் உலகம் மாறிவிட்டது. அவர்கள் அதிகம் படிக்கவும், உலகளாவிய போட்டியை எதிர்கொள்ளவும் வேண்டியிருக்கிறது. அதற்காக அவர்களுக்கு தினம்தோறும் ஏராளமான பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. போதனைகள் அளிக்கப்படுகின்றன. இவை மாணவர்களை எந்திரத்தனத்தில் செயல்பட வைத்து கல்வியில் நாட்டமின்மையை உருவாக்கிவிடுகிறது. மாணவர்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்படவும், அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும் வகுப்பறையிலும், வீட்டிலும் கடைப்பிடிக்க முடிந்த எளிமையான விளையாட்டுப் பயிற்சி முறைகளை அறிவோம்...
குழுவாக செயல்பட வைத்தல்
மாணவர்களின் கற்கும் திறனை சிறந்த ஆசிரியரால் மட்டுமே அதிகரிக்க முடியும். மாணவர்களை சிறப்பாக வழி நடத்த அவர்களை முதலில் சிறு குழுக்களாக பிரித்துக் கொள்வது சிறந்த வழிமுறையாகும். அவர்களுக்கு மாணவர்களிடம் இருக்க வேண்டிய அடிப்படை திறன்களைப் பற்றிய பட்டியலை விளக்க வேண்டும். ஒவ்வொரு குழுவிலும் சிறந்த திறன் கொண்டவர்களும், திறன்களை வளர்க்கும் நிலையில் உள்ள பின்தங்கிய மாணவர்களும் இடம் பெற வேண்டும்.
ஒவ்வொரு வகுப்பிலும் சில நிமிடங்களை மாணவர்களின் திறன் வளர்த்தலுக்காக ஆசிரியர் ஒதுக்குவது அவசியம். பாடத்திட்டத்தைத் தாண்டிய ஏதாவது ஒரு விஷயத்தை ஒவ்வொருவரும் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு வழங்குவதன் மூலம் அவர்களின் திறனை அறிந்து மேம்படுத்தலாம். மாணவர்கள் குழுவுக்குள் இயல்பாக கருத்துப் பரிமாற்றம் நிகழும் என்பதால் எளிதில் ஒவ்வொருவரின் எண்ணத்தையும் புரிந்து கொண்டு அவர்களுக்கான அடுத்தகட்ட பயிற்சியை முடிவு செய்யலாம். மாணவர்களிடம் உள்ள சரியான திறன்கள், அகற்றப்பட வேண்டிய திறன்கள், வளர்க்கப்பட வேண்டிய திறன்கள் என்று பிரித்துக் கொண்டு ஆசிரியர்கள் வழிநடத்த வேண்டும்.
கண்ணாமூச்சு ஆட்டம்
குழந்தைப்பருவம் கடந்ததும் ஒதுக்கி ஓரங்கட்டப் படும் விளையாட்டுகளில் ஒன்று கண்ணாமூச்சு. மாணவ பருவத்தில் இந்த ஆட்டத்தை கொஞ்சம் வித்தியாசப்படுத்தி ஆடினால் மாணவர்களின் திறனை மேம்படுத்த முடியும். முதலில், கொஞ்சம் இட வசதி நிறைந்த உடற்பயிற்சி கூடம் அல்லது ஆய்வகம், தேர்வறை ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். ஓய்வு நேரத்தில் மாணவர்களை கண்ணாமூச்சு ஆட வைக்கலாம்.
அப்போது நாற்காலி, பெஞ்சு, மேஜை, அட்டைப் பெட்டி போன்ற தடைகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்னர் மாணவர்களை இரண்டு பேர் கொண்ட குழுவாக பிரித்துக் கொள்ளுங்கள். தடைகளை பார்த்த பின்பு, கண்களைக் கட்டிவிட்டு ஒரு முனையில் இருந்து அறையின் மற்றொரு எல்லையை கடக்கச் சொல்லுங்கள். குழுவில் உள்ள ஒருவர் மற்றவருடன் பேசலாம், வழிசொல்லலாம், ஆனால் கைபிடித்து அழைத்துச் செல்லக்கூடாது. யார் நிறைய தடைகளில் மோதாமல், தடம் மாறாமல், வேகமாக எல்லையைக் கடக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்களாக அறிவிக்கலாம்.
இது நினைவுத்திறனை தூண்டும். மன இறுக்கத்தைப் போக்கும் விளையாட்டாகும். அத்துடன் தகவல் தொடர்பு, கவனிக்கும் ஆற்றல், மற்றவருடன் இணைந்து செயல்படுதல், அடுத்தவரின் கருத்துக்கு மதிப்பளித்தல் போன்ற திறன்களை வளர்க்க உதவும்.
பொறுமையை வளர்க்க
கயிறு இழுத்தல் போட்டியை நினைவுபடுத்தும் ‘கப் புல்லிங்’ விளையாட்டு மாணவர்களின் பொறுமையை வளர்த்து சாதிக்க உதவும். மாணவர்களை 5 அல்லது ஆறு பேர் கொண்ட குழுவாக பிரித்துக் கொள்ள வேண்டும். ஒரு சிறிய ரப்பர் பேண்டில், ஒவ்வொருவருக்கும் ஒரு நூலை இணைத்து கையில் கொடுத்துவிட வேண்டும். இப்போது நூலை இழுத்தால் ரப்பர் விரிவடையும். இழுப்பதை தளர்வாக்கினால் ரப்பர் சுருங்கும். இதைக் கொண்டு ஒரு ‘யூஸ் அண்ட் த்ரோ’, ஜூஸ் கோப்பைகளை கவ்விப் பிடிக்கச் செய்து, ஒரு பிரமீடு போல அடுக்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து இழுக்கவும், தளர்ச்சி அடையவும் செய்தால்தான் ரப்பரானது சரியாக டம்ளரை கவ்விப்பிடித்து அடுக்க உதவியாக இருக்கும். இரு குழுக்களுக்கு இடையே போட்டி வைத்துக் கொண்டால் இந்த ஆட்டம் இன்னும் சுவாரசியமாக இருக்கும்.
இந்த விளையாட்டானது மாணவர்களின் பொறுமையை பலமடங்கு அதிகரிக்கும். விடாமுயற்சியையும் ஊக்குவிக்கும். குழுவாக இணைந்து செயல்படும் திறனையும், பிரச்சினைகளை எதிர்கொள்ளும் திறனையும் வளர்க்கும்.
நேரத்தை நிர்வகிக்க
மாணவர்கள் நேரம் தவறாமையை கடைப்பிடிப்பதில் கோட்டை விடுவதாலேயே நிறைய பாடங்களையும், பயிற்சிகளையும் முடிக்காமல் தேக்கி வைத்து படிப்பதை சுமையாக்கிக் கொள்கிறார்கள். அவர்களை நேரத்தை நிர்வகிக்கும் வகையில் துரிதமாக செயல்பட வைக்க இந்த பயிற்சி உதவும்.
ஒரு ஷார்ட் பேப்பரை எடுத்துக் கொண்டு, 5 விதமான யுத்திகளை போட்டியாக அறிவிக்க வேண்டும். மாணவர்களையும் 5 பேர் கொண்ட குழுக்களாக பிரிக்க வேண்டும். ஒவ்வொரு போட்டிக்கும் 5 புள்ளிகளையும், குறிப்பிட்ட நேரத்தையும் ஒதுக்க வேண்டும். உதாரணமாக எதிர் குழுவில் உள்ளவர்களுக்கு பூக்கள் பெயர், விஞ்ஞானிகள் பெயர் என புதுமையான பெயர்களைச் சூட்டுதல் போட்டி, குறிப்பிட்ட இடத்தில் சென்று வேகமாக கையெழுத்தை பொறித்துவிட்டு வருதல், காகிதத்தில் உருவங்கள் செய்தல் என சில நிமிடங்களுக்குள் முடியக்கூடிய 5 விதமான போட்டிகளை முடிவு செய்து கொண்டு விளையாட தொடங்க வேண்டும்.
குறித்த நேரத்தில் எந்தக் குழு அதிகப் புள்ளிகள் பெறுகிறதோ? அவையே வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்.
இது பேச்சுத்திறன், சாதுர்யமாக செயல்படுதல், தகவல் தொடர்பு, நேர நிர்வாகம் போன்ற திறன்களை வளர்க்கும்.
நினைவுத்திறன் அதிகரிக்க
மாணவர்களை ஜோடியாக பிரித்துக் கொள்ள வேண்டும். சில ஓவியங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றில் ஒரு ஓவியத்தை குழுவில் ஒருவரிடம் காண்பிக்க வேண்டும். அதுபற்றிய மூன்று தகவல்களை அவரைச் சொல்லச் சொல்ல வேண்டும். மற்றவர் அதை கவனித்து எழுத வேண்டும். பின்னர் அடுத்தவர் மற்றொரு ஓவியத்தைப் பற்றிச் சொல்ல, இன்னொருவர் எழுத வேண்டும்.
இந்த விளையாட்டால் நினைவுத்திறன் மேம்படும். கவனிக்கும் ஆற்றல் பெருகும்.
வித்தியாசமான உரையாடல்
நீங்கள் நிலவுக்குச் சென்றால் என்ன செய்வீர்கள், பாலைவனத்தில் தனித்துவிடப்பட்டால் என்ன செய்வீர்கள், ஒரு லட்சம் ரூபாய் கண்டெடுத்தால் என்ன செய்வீர்கள்? டி.வி. பழுதாகிவிட்டால் என்ன செய்வீர்கள்? என்பதுபோன்ற வாழ்வியல் சார்ந்த வினாக்களைத் தொடுத்து மாணவர்களின் பதில்களைப் பெற வேண்டும். இது அவர்களின் எண்ண ஓட்டத்தையும், வித்தியாசமான சிந்தனைகளையும் வெளிக்கொண்டுவரும்.
சாதுர்யத்தையும், குழு மனப்பான்மையையும், அறிவு மேம்பாட்டையும் தூண்டக்கூடியது இந்தப் பயிற்சி.
இதேபோல 4 பேர் கொண்ட குழுக்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். 2 சீட்டுக்கட்டுகளை, ஒவ்வொரு சீட்டையும் 4 துண்டுகளாக நறுக்கி, ஒரே மாதிரியான சீட்டுகளை சேர்க்கும் போட்டியை நடத்தலாம். குறிப்பிட்ட நேரத்தில் யார் நிறைய பொருத்தமான ஜோடிகளை சேர்த்திருக்கிறார்களோ அவர்களே வெற்றியாளராக அறிவிக்கலாம்.
இதுவும் தகவல்தொடர்பு மற்றும் குழுவாகச் செயல் படும் திறனை வளர்க்கும்.
மனிதப் பூட்டு
வகுப்பில் உள்ள மாணவர்கள் அனைவரையும் இரு குழுவாக பிரித்துக் கொண்டு வட்ட வடிவில் நிற்க வேண்டும். இப்போது ஒரு கையை எதிரணி வீரருடன் கைகுலுக்க கொடுக்க வேண்டும். ஒவ்வொருவருடன் வேறுஒருவருடன் கைகுலுக்கும்போது இரு அணியும் சங்கிலிபோல பிணைக்கப்பட்டு விடுவார்கள். இப்போது கைகளை விடுவிக்காமல் ஒரு அணி உடம்பை எதிரணியின் சிக்கலில் இருந்து விடுவிக்க வேண்டும்.
இது ஒருங்கிணைந்து செயல்படும் திறனையும், பிரச்சினைகளை தீர்க்கும் ஆற்றலையும் வளர்க்கும்.
எளிமையான இந்த பயிற்சிகளை வகுப்பறையிலும், வீட்டிலும் செய்து பொழுதுபோக்குவதுடன் திறன்களையும் மேம்படுத்த முடியும்.
Related Tags :
Next Story