மதுரை விமான நிலையத்தில் சிலை கடத்தல்: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 2 பேரிடம் விசாரணை


மதுரை விமான நிலையத்தில் சிலை கடத்தல்: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 2 பேரிடம் விசாரணை
x
தினத்தந்தி 6 Feb 2018 4:15 AM IST (Updated: 6 Feb 2018 12:43 AM IST)
t-max-icont-min-icon

மதுரை விமான நிலையத்தில் இருந்து விநாயகர் சிலை கடத்தியதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 2 பேரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது அங்கு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெர்னாட், அவருடைய தோழி மேரி ஆகியோர் வந்தனர். அவர்கள் மதுரையில் இருந்து கொழும்பு சென்று பின்னர் அங்கிருந்து பிரான்ஸ் செல்ல வேண்டும் என அதிகாரிகளிடம் கூறியுள்ளனர். அப்போது அவர்கள் கொண்டு வந்த பையை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் பழமை வாய்ந்த 1 அடி உயரம், 4.8 கிலோ எடை கொண்ட விநாயகர் சிலை இருந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அந்த சிலையை கேரளாவை சேர்ந்த ஒரு வியாபாரியிடம் புதிதாக வாங்கி வருவதாகக் கூறி, அதற்கான ரசீதை அதிகாரிகளிடம் காண்பித்தனர். ஆனால் அவர்கள் வைத்திருந்தது பழைய சிலை போன்று இருந்ததால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

உடனே அதிகாரிகள் அதில் இருந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டபோது, அதில் பேசிய வியாபாரி அவர்கள் புதிதாக விநாயகர் சிலை வாங்கியதாகவும், பழைய சிலை எதையும் வாங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதனால் மேலும் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் பெர்னாட், மேரி ஆகியோரை சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் கூறும்போது, “பெர்னாட், மேரி இருவரும் இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ளனர். இந்தியாவின் பல பகுதியை சுற்றி பார்த்த அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவிற்கு சென்றுள்ளனர். அப்போது அவர்கள் இந்த விநாயகர் சிலையை வாங்கியதாக கூறப்படுகிறது. அவர்கள் அளித்த தகவல்கள் முரண்பாடாக இருப்பதன் காரணமாக அவர்களிடம் விசாரித்து வருகிறோம்“ என்றனர். 

Next Story