பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Feb 2018 3:30 AM IST (Updated: 6 Feb 2018 1:05 AM IST)
t-max-icont-min-icon

பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யக்கோரி மஞ்சூர் அருகே உள்ள இத்தலாரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மஞ்சூர்,

நீலகிரி மாவட்டத்தின் முக்கிய பொருளாதாரமாக விளங்குவது பச்சை தேயிலை விவசாயம். இந்த தேயிலை விவசாயத்தை நம்பி 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளன. பச்சை தேயிலைக்கு கடந்த சில ஆண்டுகளாக விலை படிப்படியாக சரிந்து வருகிறது. இதனால் மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகி உள்ளது.

பச்சை தேயிலைக்கு ஒரே நிரந்தர தீர்வு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்வதே ஆகும். பச்சை தேயிலைக்கு குறைந்தபட்சம் ரூ.30 விலை நிர்ணயம் செய்தால் மட்டுமே விவசாயிகள் தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். ஆனால் தற்போது ஒரு கிலோ பச்சை தேயிலைக்கு கிடைப்பதோ ரூ.10 முதல் ரூ.12 வரை மட்டும்தான்.

இந்த விலையை கொண்டு விவசாயிகள் எந்தவித அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். இதனால் தங்களின் பண தேவைக்கு சில விவசாயிகள் தேயிலை தோட்டங்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நிலையும் உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் தேயிலை விவசாயம் அடியோடு பாதிக்கப்படும்.

எனவே மீதமுள்ள தேயிலை தோட்டங்களை காப்பாற்றவும், தேயிலை வாழ்வாதாரத்தை காப்பாற்றவும் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க நீலகிரி மாவட்ட சிறு, குறு விவசாயிகள் சங்கம் சார்பில் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்சம் ரூ.30 விலை நிர்ணயம் செய்ய கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் உள்ள கிராமங்களில் விவசாயிகளை திரட்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மஞ்சூர் அருகே உள்ள இத்தலார் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை அமைந்துள்ள பஜாரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட சிறு, குறு விவசாயிகள் சங்க தலைவர் ஜே.பி.சுப்ரமணியம் தலைமை தாங்கினார். எடக்காடு வட்டார விவசாயிகள் சங்க தலைவர் மகாலிங்கம், முக்கிமலை சுகுமாறன், மஞ்சூர் பகுதி விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை சங்கத்தினருக்கு வழங்க வேண்டிய ரூ.37 கோடி நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் என்றும், பச்சை தேயிலைக்கு கடந்த 4 மாதங்களாக பணப்பட்டுவாடா செய்யாததை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். இதில், நீலகிரி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் அட்டாரி நஞ்சன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சுரேஷ் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து இத்தலார் தொழிற்சாலையில் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாத பச்சை தேயிலைக்கான பணப்பட்டுவாடா செய்யப்பட்டது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இத்தலார் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. 

Next Story