வீடுகளை காலி செய்யக்கோரி வனத்துறை நோட்டீஸ் கலெக்டரிடம், கிராம மக்கள் மனு


வீடுகளை காலி செய்யக்கோரி வனத்துறை நோட்டீஸ் கலெக்டரிடம், கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 6 Feb 2018 4:00 AM IST (Updated: 6 Feb 2018 1:16 AM IST)
t-max-icont-min-icon

அகமலை ஊராட்சியில் உள்ள கிராமங்களில் வீடுகளை காலி செய்யக்கோரி வனத்துறையினர் நோட்டீஸ் வழங்கி உள்ளதாக கலெக்டரிடம் மலைக்கிராம மக்கள் மனு அளித்தனர்.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தலைமை தாங்கி, மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்து 77 ஆயிரத்து 990 மதிப்பில் நவீன செயற்கை கால்களை 17 பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் மனுக்கள் அளிக்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து இருந்தனர். பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் மனுக்கள் அளித்தனர். அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட அகமலை, அண்ணாநகர், ஊரடி, ஊத்துக்காடி, கரும்பாறை உள்ளிட்ட 10 மலைக்கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

அகமலை ஊராட்சியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். கடந்த வாரம் அகமலை சாலையில் இருந்து அண்ணாநகர் கிராமத்துக்கு மாவட்ட கலெக்டர் ஒதுக்கீடு செய்த நிதியில் இருந்து, சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடந்தது. இந்த பணியை வனத்துறையினர் தடுத்து நிறுத்தி விட்டனர்.

மேலும், இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் 15 நாட்களுக்குள் வீட்டை காலி செய்து வெளியேற வேண்டும் என்று வனத்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். எனவே, இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்றும் வகையில் எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். மேலும் எங்களை மிரட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆண்டிப்பட்டி தாலுகா ஜி.உசிலம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ராமலிங்கபுரம் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், ‘எங்கள் பகுதியில் குடிநீர், சாக்கடை கால்வாய், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வருகிறோம். அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் எங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியை சேர்ந்த பெண்கள் சிலர் கைக்குழந்தையுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘சருத்துப்பட்டியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை போலீஸ்காரர் உள்பட சிலர் ஆக்கிரமித்துள்ளனர். தொடர்ந்து மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர். எனவே சட்டம் ஒழுங்கை காக்கவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்’ என்று கூறி இருந்தனர். 

Next Story