ஜெயலலிதா விட்டுச்சென்ற நலத்திட்டங்களை தமிழக அரசு முழுமையாக செயல்படுத்தவில்லை, ஜெ.தீபா குற்றச்சாட்டு


ஜெயலலிதா விட்டுச்சென்ற நலத்திட்டங்களை தமிழக அரசு முழுமையாக செயல்படுத்தவில்லை, ஜெ.தீபா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 6 Feb 2018 4:00 AM IST (Updated: 6 Feb 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா விட்டுச்சென்ற நலத்திட்டங்களை தமிழக அரசு முழுமையாக செயல்படுத்தவில்லை என்று ஜெ.தீபா குற்றம் சாட்டினார்.

கடலூர்,

எம்.ஜி.ஆர்., அம்மா, தீபா பேரவை கடலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா, ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தேரடி தெருவில் நேற்று இரவு நடந்தது.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக எம்.ஜி.ஆர்., அம்மா, தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:-

அண்ணா எம்.ஜி.ஆரை அரசியலுக்கு கொண்டு வந்தார். எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவை அரசியலுக்கு கொண்டு வந்தார். ஆனால் என்னை நீங்கள் அழைத்து வந்திருக்கிறீர்கள். உங்களை விட்டு எங்கும் செல்ல மாட்டேன். எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க. ஜெயலலிதாவின் தியாகத்தால் வலுப்பெற்றது. அவரது வழியில் மக்களுக்காக பணியாற்றுவதே என்னுடைய லட்சிய பயணமாக இருக்கும்.

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை ஒரு புத்தகமாக எழுத இருக்கிறேன். அதுவும் அந்த பணியை அவரது பிறந்த நாளில் தொடங்க இருக்கிறேன். ஜெயலலிதா விட்டுச்சென்ற பணியை தொடர்ந்து செய்வேன்.

சினிமாவில் வருவதுபோல் யாரும் ஒரே நாளில் முதல்-அமைச்சர் ஆகிவிட முடியாது. அ.தி.மு.க.வையும், மக்களையும் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உண்டு. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை கமிஷன் தேவையில்லை. ஏனென்றால் உண்மை வெளிவராது. விசாரணை கமிஷன் தேவையில்லாமல் இயங்கி கொண்டிருக்கிறது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக உண்மை நிலையை தமிழக அரசு வெளியிடவில்லை. நீங்கள் வழக்கு தொடர வேண்டியது தானே என்று சிலர் கேட்டார்கள். நான் வழக்கு தொடர்ந்தால் நியாயம் கிடைக்குமா? உண்மை வெளிவருமா? அதற்கும் தடை ஏற்படுத்துவார்கள். அந்த தீய சக்திகளிடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்டு எடுப்போம்.

ஜெயலலிதா பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் உண்மையாக மக்களாட்சியை மலர செய்வோம். ஆனால் ஜெயலலிதா விட்டுச்சென்ற பணிகளை, நலத்திட்டங்களை தமிழக அரசு முழுமையாக செயல்படுத்தவில்லை. எடுத்துக்காட்டாக அவர் கொண்டு வந்த தொட்டில் குழந்தை திட்டம் முழுமையாக செயல்படாமல் உள்ளது. இதேபோல் பல்வேறு நலத்திட்டங்களை இந்த அரசு பின்பற்றவில்லை. மக்கள் வரிப்பணத்தில் இந்த அரசு விழா நடத்துகிறது.

இவ்வாறு ஜெ.தீபா பேசினார்.

அதைத்தொடர்ந்து ஜெ.தீபா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

என் மீது ரூ.1.12 கோடி மோசடி செய்ததாக புகார் சொல்லப்பட்டுள்ளது பற்றி கேட்கிறீர்கள். ஏற்கனவே என் மீது பல்வேறு புகார்கள், வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. அதில் இதுவும் ஒன்று. சசிகலா குடும்பத்தினரால் பின்னப்பட்ட சதி தான் இந்த புகார். இது பற்றி நான் ஏற்கனவே கமிஷனரிடம் புகார் தெரிவித்து இருக்கிறேன். ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் வழக்கு குறித்த விவரங்களை சசிகலாவுக்கு வழங்கக்கூடாது என்று எதிர்மனு தாக்கல் செய்துள்ளேன்.

மத்திய அரசின் எந்திரமாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் நடிகர்களாக இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் தான். ஆனால் நடிகர்கள் அரசியலுக்கு வந்து வெற்றி பெறுவதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இவ்வாறு ஜெ.தீபா கூறினார். 

Next Story