மறைமலை அடிகள் சாலையில் நீட் தேர்வு எதிர்ப்பு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம்


மறைமலை அடிகள் சாலையில் நீட் தேர்வு எதிர்ப்பு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Feb 2018 3:30 AM IST (Updated: 6 Feb 2018 2:03 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வு எதிர்ப்பு நடவடிக்கை குழுவினர் நேற்று மறைமலை அடிகள் சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுச்சேரி,

மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கான நீட் தேர்விலிருந்து புதுவைக்கு விலக்கு அளிக்ககோரும் இரு சட்டத்திருத்த மசோதாக்களுக்கும் உடனடியாக ஜனாதிபதி ஒப்புதலை பெறும் முயற்சியில் புதுவை அரசு தீவிரமாக ஈடுபட வேண்டும். மருத்துவ கவுன்சில் ஆப் இந்தியா என்ற அமைப்பை மாற்றி, தேசிய மருத்துவ ஆணையம் என்று உருவாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நீட் தேர்வு எதிர்ப்பு நடவடிக்கை குழுவினர் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த குழு சார்பில் புதுவை மறைமலை அடிகள் சாலையில் உள்ள சுதேசி மில் அருகில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு புதுச்சேரி மாநில நீட் எதிர்ப்பு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் சிவ.வீரமணி தலைமை தாங்கினார். தி.மு.க. புதுவை தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. தி.மு.க.வின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நீட் பிரச்சினையில் தமிழக அரசை குறை கூறுவதை நோக்கமாக கொள்ள வில்லை. மாறாக மாணவ மாணவிகளை இந்த பேராபத்தில் இருந்து காப்பாற்ற வேண்டியதை தலையாய கடமையாக கொண்டு செயல்பட்டு வருகின்றார். அவரது முயற்சியில் தமிழகத்திற்கு விடிவு காலம் ஏற்படும்போது, புதுவை மாணவ, மாணவிகளும் உறுதியாக காப்பாற்றப்படுவார்கள் என்பது நிச்சயம்.

புதுவைக்கு விரைவில் பிரதமர் மோடி வர உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. பொதுவாக மாநிலங்களுக்கு பிரதமர் செல்கின்ற போது அங்குள்ள மக்களை சந்தோஷப்படுத்துகின்ற விதமாக மக்கள் வரவேற்பை பெறுகின்ற வகையில் மிகச்சிறந்த திட்டங்களை அறிவிப்பது வழக்கம். அந்த அடிப்படையில் புதுவை மாநிலத்திற்கு பிரதமர் வரும்போது ரோடியர், சுதேசி, பாரதி ஆகிய 3 பஞ்சாலைகளுக்கும் முழுமையான அளவில் நிதியுதவி அளித்து, அங்கு தயாரிக்கப்படும் துணிகளை மத்திய அரசே வாங்கிக்கொள்ள கோரிக்கையை அனைத்துக் கட்சியினர் சார்பாக வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story