கபடி விளையாட்டில் முன்விரோதம்: வாலிபரை கத்தியால் வெட்டிய 4 பேர் கைது


கபடி விளையாட்டில் முன்விரோதம்: வாலிபரை கத்தியால் வெட்டிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 6 Feb 2018 4:30 AM IST (Updated: 6 Feb 2018 2:30 AM IST)
t-max-icont-min-icon

குன்றத்தூர் அருகே கபடி விளையாட்டில் முன்விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் வெட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த மாடம்பாக்கம், அண்ணா தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 22). கபடி வீரரான இவர் நேற்று முன்தினம் குன்றத்தூரை அடுத்த எருமையூரில் உள்ள தனது நண்பர் இல்ல விழாவுக்கு சென்று விட்டு நண்பர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.

பழந்தண்டலம் அருகே சென்றபோது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 5 பேர் ராஜேசை மடக்கி கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர். வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜேசை அவரது நண்பர்கள் மீட்டு சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் குன்றத்தூர்-பல்லாவரம் செல்லும் சாலையில் கரைமா நகரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த வாலிபர்கள் 4 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர்.

அந்த வாலிபர்களை மடக்கிப்பிடித்து விசாரித்தபோது அவர்கள் மோட்டார் சைக்கிள்களில் ரத்தம் படிந்த கத்திகளை வைத்திருப்பதும், கபடி வீரர் ராஜேசை வெட்டி விட்டு வந்ததும் தெரியவந்தது.

தீவிர விசாரணையில் பிடிபட்டவர்கள் சேலையூரை சேர்ந்த வெஸ்லி (28), அகரம்தென் பகுதியை சேர்ந்த லெனின் (27), மாடம்பாக் கத்தை சேர்ந்த பரத் (23), பிரவின்ராஜ் (28), என்பது தெரியவந்தது. பிடிபட்ட வெஸ்லியும் கபடி வீரர் ஆவார்.

கடந்த 25-ந் தேதி சேலையூரில் நடைபெற்ற கபடி போட்டியில் ராஜேஷ் அணி வெற்றி பெற்றது. வெஸ்லி அணி தோல்வி அடைந்தது. இதனால் அவர்கள் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறியது. இதனால் ஆத்திரம் அடைந்த வெஸ்லி, ராஜேசை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

அதன்படி வெஸ்லி நேற்று முன்தினம் பழந்தண்டலம் அருகே ராஜேசை தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் வெட்டினார். பின்பு அவர் இறந்து விட்டதாக கருதி அங்கு இருந்து சென்றது தெரியவந்தது.

வாலிபர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய சுரேஷ் என்பவரை தேடி வருகின்றனர். 

Next Story