மீண்டும் வேலை வழங்கக்கோரி தனியார் நிறுவன தொழிலாளர்கள் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம்


மீண்டும் வேலை வழங்கக்கோரி தனியார் நிறுவன தொழிலாளர்கள் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 6 Feb 2018 4:30 AM IST (Updated: 6 Feb 2018 2:36 AM IST)
t-max-icont-min-icon

மீண்டும் வேலை வழங்கக்கோரி தனியார் நிறுவன தொழிலாளர்கள் 29 பேர், தங்கள் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீஞ்சூர்,

மீஞ்சூரை அடுத்த வல்லூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கன்டெய்னர் கம்பெனி உள்ளது. இங்கு கடந்த 15 ஆண்டுகளாக 80-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். ஊதிய உயர்வு கேட்டதால் இவர்களில் 80 பேரை கடந்த ஆண்டு ஜூலை மாதம் கம்பெனி நிர்வாகம் வேலை நீக்கம் செய்தது.

இதையடுத்து பொன்னேரி கோட்டாட்சியர் மற்றும் தொழிலாளர் நல ஆணையாளர் நடத்திய பேச்சுவார்த்தையை ஏற்று கம்பெனி நிர்வாகம் 51 பேருக்கு மட்டும் மீண்டும் வேலை வழங்கியது. மீதம் உள்ள 29 தொழிலாளர்கள் வேலை இழந்து வருவாய் இல்லாமல் குடும்பத்துடன் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் வேலை நீக்கம் செய்யப்பட்ட 29 தொழிலாளர்களும் தங்கள் மனைவி, கைக்குழந்தைகள் என குடும்பத்துடன் கம்பெனிக்கு சென்று தங்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

இதற்காக நேற்று 29 தொழிலாளர்களும் தங்கள் குடும்பத்துடன் கம்பெனி நோக்கி ஊர்வலமாக திருவொற்றியூர்-பொன்னேரி நெடுஞ்சாலையில் சென்றனர். அவர்களை மீஞ்சூர் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த வருவாய் ஆய்வாளர் உமாசங்கரி, கிராம நிர்வாக அலுவலர் சஞ்சீவி பெருமாள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணி, ஞானசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் 29 பேருக்கும் மீண்டும் வேலை வழங்குவது தொடர்பாக கம்பெனி நிர்வாகத்துடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக தெரிகிறது. இதனால் தொழிலாளர்கள் அனைவரும் வல்லூர் கிராமம் அருகே குடும்பத்துடன் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சி.ஐ.டி.யு. சங்கத்தலைவர் விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தங்களுக்கு மீண்டும் கம்பெனி நிர்வாகம் வேலை வழங்கும் வரை இந்த போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர். 

Next Story