மறையூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


மறையூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 6 Feb 2018 3:15 AM IST (Updated: 6 Feb 2018 2:54 AM IST)
t-max-icont-min-icon

மறையூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்,

மறையூரை அடுத்த காந்தலூர் கோவில்கடவு 11–ம் வார்டு பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு காந்தலூர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குழாய்கள் பதிக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் 11–வது வார்டுக்கு செல்லும் குடிநீர் குழாயை மர்மநபர்கள் சிலர் உடைத்து தண்ணீர் திருடுவதாக கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதி மக்களுக்கு கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தண்ணீரை தேடி பொதுமக்கள் அலையும் சூழல் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கும் தள்ளப்பட்டனர்.

இந்தநிலையில் முறையாக தண்ணீர் வினியோகம் செய்யக்கோரியும், குழாயை உடைத்து தண்ணீர் திருடுவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் மறையூர்–காந்தலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மறையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பஞ்சாயத்து நிர்வாகத்தின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story