தனியார் பள்ளியில் ராட்சத பலூன் வெடித்ததில் சிலம்பாட்ட பயிற்சியாளர் படுகாயம்


தனியார் பள்ளியில் ராட்சத பலூன் வெடித்ததில் சிலம்பாட்ட பயிற்சியாளர் படுகாயம்
x
தினத்தந்தி 6 Feb 2018 4:15 AM IST (Updated: 6 Feb 2018 2:56 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி கே.கே.நகர் அருகே உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் ராட்சத பலூன் வெடித்ததில் சிலம்பாட்ட பயிற்சியாளர் படுகாயமடைந்தார்.

செம்பட்டு,

திருச்சி கே.கே.நகர் நாகப்பா நகரில் ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 2,500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் ஆண்டு விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன் ஒரு பகுதியாக பள்ளி நிர்வாகம் சார்பில், அனைவரது கவனத்தை ஈர்க்கும் விதமாக ஒரு சாகச நிகழ்ச்சிக்காக ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட ராட்சத பலூன் ஒன்றை பறக்க விட முடிவு செய்தது.

சாகச நிகழ்ச்சியை அந்த பள்ளியின் சிலம்பாட்ட பயிற்சியாளர் பார்த்தீபன் (வயது 24) தலைமையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட அந்த ராட்சத பலூனை பறக்க விடும் பணியில் சிலம்பாட்ட பயிற்சியாளர் பார்த்தீபன் ஈடுபட்டார்.

அப்போது அந்த ராட்சத பலூன் மேலே பறப்பதற்கு பதிலாக, கீழேயே திடீரென்று குண்டு வெடித்ததுபோல் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அப்போது அந்த இடம் முழுவதும் போர்க்களம் போல் காட்சி அளித்தது. கல், மண் துகள்கள் பல அடி தூரத்திற்கு மேலே சென்றன. ராட்சத பலூன் வெடித்ததில் தூக்கி வீசப்பட்ட சிலம்பாட்ட பயிற்சி யாளர் பார்த்தீபன் படுகாயம் அடைந்தார்.

ராட்சத பலூன் வெடித்ததை கண்ட மாணவ-மாணவிகள் அய்யோ, அம்மா என்று சத்தம் போட்ட படி நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது மாணவ-மாணவிகள் பலர் ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொண்டு கீழே விழுந்தனர். பின்னர் பதறி அடித்துக்கொண்டு எழுந்து மீண்டும் ஓடி பள்ளி வகுப்பறையில் புகுந்து கொண்டனர்.

இதில் அதிர்ஷ்டவசமாக மாணவ- மாணவிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. படுகாயமடைந்த பார்த்தீபன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். பலூன் வெடித்த சம்பவத்தை கேள்விப்பட்ட மாணவ-மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு பதறி அடித்து சென்றனர்.

பின்னர் தங்கள் பிள்ளைகள் எந்த வித காயமும் இன்றி இருப்பதை பார்த்து நிம்மதி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த விமானநிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூனை உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதுமின்றியும், அளவுக்கு அதிகமாக ஹீலியம் வாயு அந்த பலூனில் நிரப்பியும் பறக்க விட்டதால் தான் வெடித்து சிதறியது. அப்போது பலூன் வெடித்து சிதறிய பகுதியில் மாணவ-மாணவிகள் இருந்திருந்தால் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். பள்ளி நிர்வாகம் ராட்சத பலூன் பறக்கவிடுவதற்கு முன்பாக எந்தவொரு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதால் தான் பலூன் வெடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் பள்ளி நிர்வாகிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story