குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 6 Feb 2018 4:15 AM IST (Updated: 6 Feb 2018 2:57 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டி அருகே எழிலூரில் குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே எழிலூரில் சமத்துவபுரம் உள்ளது. இதில் 86-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்குள்ள சமத்துவபுர வீடுகளுக்கு முறையான குடிநீர் இணைப்புகள் வழங்கப்படவில்லை. வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகளில் முறையாக தண்ணீர் வரவில்லை என தெரிகிறது. இந்தநிலையில் குடிநீர் வழங்கக்கோரி அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சமத்துவபுரம் வாசலில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன், சப்-இன்ஸ்பெக்டர் கபிலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திருத்துறைப்பூண்டி-களப்பால் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story