கோவிலில் அமெரிக்க ஜோடிக்கு இந்து முறைப்படி திருமணம் உறவினர்கள் அட்சதை தூவி வாழ்த்தினர்


கோவிலில் அமெரிக்க ஜோடிக்கு இந்து முறைப்படி திருமணம் உறவினர்கள் அட்சதை தூவி வாழ்த்தினர்
x
தினத்தந்தி 6 Feb 2018 4:15 AM IST (Updated: 6 Feb 2018 2:57 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே உள்ள ஒரு கோவிலில், அமெரிக்க ஜோடிக்கு இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். மணமக்களை, அவருடைய உறவினர்கள் அட்சதை தூவி வாழ்த்தினர்.

தஞ்சாவூர்,

அமெரிக்காவை சேர்ந்த 25 பேர் கொண்ட குழுவினர் இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்துள்ளனர். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டு அவர்கள், தஞ்சைக்கு வந்தனர். தஞ்சையில் பெரிய கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று அவர்கள் சுற்றிப்பார்த்தனர்.

இந்த குழுவில் அமெரிக்காவை சேர்ந்த ஜோ, ஷிண்டி ஆகியோரும் வந்தனர். ஏற்கனவே திருமணமான இவர்கள் இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பினர். இதனை அவர்கள் தங்களுடன் வந்திருந்த உறவினர்களிடம் தெரிவித்தனர். அதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து ஜோ, ஷிண்டி ஆகியோர் நேற்று காலை தஞ்சையை அடுத்த தளவாய்பாளையத்தில் உள்ள புவனேஸ்வரி அம்மன் கோவிலுக்கு உறவினர்கள் புடைசூழ வாகனத்தில் சென்றனர். அப்போது மணமகன் ஜோ பட்டு வேட்டி, சட்டை அணிந்திருந்தார். மணமகள் பட்டுச்சேலை கட்டி இருந்தார். பின்னர் உறவினர்கள் முன்னிலையில் இந்து முறைப்படி ஷிண்டியின் கழுத்தில் ஜோ மஞ்சள் தாலி கயிற்றை கட்டினார். இதையடுத்து உறவினர்கள், மணமக்களை மலர் மற்றும் அட்சதை தூவி வாழ்த்தினர்.

வெளிநாட்டை சேர்ந்தவர்கள் தஞ்சை அருகே உள்ள கோவிலில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட தகவல் கிடைத்ததும் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கோவிலுக்கு திரண்டு வந்து பார்த்தனர். திருமணம் முடிந்த பின்னர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர். 

Next Story