கணவரின் கொடுமையில் இருந்து காப்பாற்றும்படி பெண் கதறல்


கணவரின் கொடுமையில் இருந்து காப்பாற்றும்படி பெண் கதறல்
x
தினத்தந்தி 6 Feb 2018 4:00 AM IST (Updated: 6 Feb 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

கணவரின் கொடுமையில் இருந்து காப்பாற்றும்படி பெண் ஒருவர் கதறும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை,

மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் தன்னை கொடுமைப்படுத்தி வருவதாகவும், அவரிடம் இருந்து தன்னை காப்பாற்றும்படியும் கூறி வீடியோ ஒன்றை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வீடியோவில் அந்த பெண் கண்ணீர் வடித்தபடியே தனது துயரத்தை பற்றி விவரிக்கிறார். என் கணவர் என்னை உடல் ரீதியாக துன்புறுத்தி வருகிறார். குழந்தைகளின் நலனுக்காக தான் நான் இருக்கிறேன்.

ஆனால் இந்த மனிதன் (கணவர்) என் வாழ்நாளின் தேவையை செய்ய மறுக்கிறார். சமீபத்தில் என் மீது மின்சாரத்தை பாய்ச்சினார். வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார்.

சூதாட்டத்தில் ஈடுபடுகிறார். அவர் மீது போலீசில் புகார்கள் கொடுத்தேன். ஆனால் போலீசார் விசாரணை நடத்தவில்லை என்று மனம் வருந்தியபடி கூறுகிறார். பெண்ணின் இந்த வீடியோவை சினிமா தயாரிப்பாளர் அசோக் பண்டிட் தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட பிறகு தான் அந்த வீடியோ அதிகளவில் வைரலாகி உள்ளது. இதுபற்றி மும்பை போலீஸ் டுவிட்டரில் பதில் அளித்து உள்ளது.

அதில், துணை போலீஸ் மண்டலம் 9 இதுபற்றி விசாரித்து வருவதாக கூறப்பட்டு உள்ளது. இந்த நிலையில், வீடியோவில் கணவரின் கொடுமை பற்றி கதறும் அந்த பெண் மும்பை கார் பகுதியில் உள்ள டூப்ளக்ஸ் அடுக்குமாடி குடியிருப்பின் 11-வது மாடியில் 3 குழந்தைகளுடன் வசித்து வருவது தெரியவந்து உள்ளது.

Next Story