கிராமத்தில் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்


கிராமத்தில் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்
x

விக்கிரமசிங்கபுரம் அருகே காட்டு யானைகள் கிராமத்தில் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்தி உள்ளன.

விக்கிரமசிங்கபுரம்,

விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அறவன்குடியிருப்பு கிராமம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்து உள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து யானை, மிளா உள்ளிட்ட விலங்குகள் அவ்வப்போது கிராமத்தில் புகுந்து அங்குள்ள விளைநிலங்களில் பயிரிடப்பட்டு உள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. நேற்று முன்தினம் இரவு 6 காட்டு யானைகள் அறவன்குடியிருப்பை சேர்ந்த சேகர் என்பவரது தோட்டத்துக்குள் புகுந்தன. அவை அங்கு பயிரிடப்பட்டு உள்ள நெற்பயிர்களை பிடுங்கி தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தின.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது,
மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் எங்களது கிராமம் உள்ளதால் வனப்பகுதியில் இருந்து வரும் யானை உள்ளிட்ட விலங்குகள், அவ்வப்போது எங்களது விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதுதொடர்பாக பலமுறை வனத்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும், அதை தடுக்க நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

தற்போது சேகர் என்பவரின் தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள், அங்கு பயிரிடப்பட்டு இருந்த நெற்பயிர்களை சேதப்படுத்தி உள்ளன. இதுபோன்று யானைகள் பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளோம். எனவே, இனிமேலாவது யானைகளின் அட்டகாசத்தை தடுக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உள்ள வனப்பகுதியில் முண்டந்துறையில் இருந்து சேர்வலாறு செல்லும் சாலை உள்ளது. அந்த சாலையை அடிக்கடி யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் கடந்து செல்கின்றன. அந்த சாலையில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய சாலை அமைக்கப்பட்டு உள்ளது. அதில் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ஒரு வேகத்தடை உள்ளது. அந்த சாலை வழியாக சேர்வலாறில் பணிபுரியும் மின்வாரிய ஊழியர்களும், வனத்துறையினரும் வாகனங்களில் சென்று வருகிறார்கள். அவ்வாறு செல்லும்போது யானைகள் உள்ளிட்டவை சாலையை கடந்தால் வாகனங்களை வேகமாக ஓட்டுவதற்கு வேகத்தடை தடையாக இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

நேற்று முன்தினம் இரவு கூட அந்த சாலையை காட்டு யானைகள் கடந்து சென்று உள்ளன. அப்போது அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள், யானைகளிடம் இருந்து தப்பிக்க சிரமப்பட்டு உள்ளனர். கடந்த மாதம் மின்வாரிய டிரைவர் ஒருவர் தனது மகளுடன் அந்த சாலையில் சென்றபோது யானைகள் அவர்களை துரத்தி உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால் அந்த சாலையில் உள்ள வேகத்தடைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story