காய்கறிகளை தரையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்


காய்கறிகளை தரையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 6 Feb 2018 4:55 AM IST (Updated: 6 Feb 2018 4:55 AM IST)
t-max-icont-min-icon

விவசாய விளைபொருட்களை சேமிக்க போதிய குளிர்பதன கிடங்குகள் அமைக்க வலியுறுத்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் காய்கறிகளை தரையில் கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் தக்காளி, மிளகாய், கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய், சுரைக்காய் போன்ற காய்கறிகளையும், உளுந்து, பாசி பயறு, மக்காச்சோளம், கம்பு போன்ற தானிய பயிர்களையும் பயிரிட்டனர். தற்போது காய்கறிகள் மற்றும் பல்வேறு தானியங்கள் விளைச்சல் அதிகரித்ததால், அவற்றை விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.

ஒரு கிலோ புடலங்காய் ரூ.2-க்கும், தக்காளி ரூ.3-க்கும், கத்தரிக்காய், மிளகாய், வெண்டைக்காய், சுரைக்காய் போன்றவை ரூ.5-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. அதேபோன்று ஒரு குவிண்டால் (100 கிலோ கிராம்) உளுந்து முதல் ரகம் ரூ.3,500-க்கும், 2-வது ரகம் ரூ.1,000-க்கும், பாசி பயறு முதல் ரகம் ரூ.3,500-க்கும், 2-வது ரகம் ரூ.1,000-க்கும், மக்காச்சோளம் ரூ.1,500-க்கும், கம்பு ரூ.1,000-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது'

எனவே, காய்கறிகள், தானியங்கள் போன்றவற்றை சேமித்து வைக்க போதிய குளிர்பதன கிடங்குகளை அமைக்க வேண்டும். விவசாய விளைபொருட்களை அரசு கொள்முதல் செய்து கூட்டுறவு சங்கங்களில் விற்பனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, பாரதீய கிசான் சங்கத்தினர் நேற்று காலையில் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள், உதவி கலெக்டர் அலுவலகத்தில் தக்காளி, புடலங்காய், வெண்டைக்காய் போன்ற காய்கறிகளை தரையில் கொட்டி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்க மாவட்ட தலைவர் வக்கீல் ரங்கநாயகலு, செயலாளர் சேசுநாயக்கர், துணை தலைவர் பரமேசுவரன், மகளிர் அணி தலைவி கிருஷ்ணம்மாள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்லப்பாண்டியனிடம் கோரிக்கை மனு வழங்கி விட்டு, கலைந்து சென்றனர். விவசாயிகள் கொண்டு வந்த காய்கறிகளை, அங்கு வந்திருந்த பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினர்.

Next Story