‘குளோனிங்’ குரங்கு


‘குளோனிங்’ குரங்கு
x
தினத்தந்தி 6 Feb 2018 11:04 AM IST (Updated: 6 Feb 2018 11:04 AM IST)
t-max-icont-min-icon

மக்காக் வகையைச் சேர்ந்த இரண்டு பெண் குரங்குகளை வெற்றிகரமாக குளோனிங் செய்துள்ளது.

குளோனிங் முறையில் பிறந்த குரங்கு குட்டிகள் சாங் சாங் மற்றும் ஹுவா ஹுவா ஒரு உயிரினத்தை இரண்டாக நகலெடுக்கும் உயிரித்தொழில்நுட்பம் ‘குளோனிங்’ என்று அழைக்கப்படுகிறது. உலகில் குளோனிங் மூலம் உருவாக்கப்பட்ட முதல் விலங்கு ‘டாலி’ எனும் செம்மறி ஆடு. 1996-ல் டாலி உருவாக்கப்பட்டதை தொடர்ந்து அதே தொழில்நுட்பம் மூலமாக இதுவரை பூனைகள், நாய்கள், எலிகள் மற்றும் கால்நடைகள் உள்ளிட்ட சுமார் 24 வகையான விலங்குகள் குளோனிங் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன.

துரதிர்ஷ்டவசமாக, குரங்குகள் மற்றும் மனிதர்களை உள்ளடக்கிய ‘பிரைமேட்ஸ்’ (Primates) அல்லது உயர் விலங்கினங்கள் என்று அழைக்கக் கூடிய உயிரினங்களை ‘டாலி குளோனிங்’ தொழில்நுட்பம் மூலமாக குளோனிங் செய்யும் முயற்சிகள் அனைத்தும் இதுவரை தோல்வியையே தழுவி வந்துள்ளன.

சீனாவில் ஷாங்ஹாய் நகரில் உள்ள சைனீஸ் அகாடமி ஆப் சயின்சஸ் நரம்பியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் கியாங் சுன் தலைமையிலான ஆய்வுக்குழுவானது, டாலி குளோனிங் தொழில்நுட்பத்தில் சில மாறுதல்களைச் செய்ததன் மூலம் மக்காக் வகையைச் சேர்ந்த இரண்டு பெண் குரங்குகளை வெற்றிகரமாக குளோனிங் செய்துள்ளது.

இந்த குரங்குகளுக்கு சாங் சாங் (Zhong Zhong) மற்றும் ஹுவா ஹுவா (Hua Hua) என்று பெயரிடப்பட்டுள்ளது.

‘சொமாட்டிக் செல் ட்ரான்ஸ்பர்’ (somatic cell nuclear transfer) எனும் தொழில்நுட்பம் மூலம் டாலி உருவாக்கப்பட்டது. இந்த தொழில்நுட்பத்தில், ஒரு கருமுட்டையின் நியூக்ளியஸ் பகுதியை எடுத்து, நியூக்ளியஸ் நீக்கப்பட்ட மற்றொரு கருமுட்டையில் வைத்துவிடுவார்கள். அதனைத் தொடர்ந்து, அந்த கருமுட்டையின் மீது மின்சாரத்தை செலுத்துவதன் மூலமாக, அந்த கருமுட்டையானது தான் கருவுற்றது போல பாவித்துக்கொண்டு கரு வளர்ச்சியைத் தொடங்குமாறு தூண்டிவிடப்படும்.

இவ்வாறு வளரும் கருவானது, பின்னர் ஒரு வாடகைத் தாயின் வயிற்றில் பொருத்தப்பட்டு முழுக்குழந்தை உருவாகும் வரை வளர்த்தெடுக்கப்படும். இதன்மூலம் உருவாகும் குழந்தையானது கருமுட்டைக்குச் சொந்தமான விலங்கின் மரபு நகலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரைமேட் அல்லது உயர் விலங்கினங்களின் குளோனிங்கைப் பொறுத்தவரை பிளாஸ்ட்டோசிஸ்ட் (blastocyst) அல்லது இளம் கருவளர் பருவத்திலேயே குளோனிங் முயற்சியானது தோல்வி அடைந்துவிடும். ஆனால், இந்த புதிய குளோனிங் ஆய்வில், இரண்டு புதிய ஊட்டச்சத்துகள் மற்றும் வளர்ச்சிக் காரணிகள் ஆய்வில் சேர்க்கப்பட்டன.

ட்ரைக்கோ ஸ்டேட்டின் ஏ மற்றும் ஆர்.என்.ஏ (trichostatin A and messenger RNA) எனும் அந்த இரு மூலக்கூறுகள் ஆரோக்கியமான கரு வளர்ச்சி மற்றும் அதற்கு அவசியமான மரபணு செயல்பாடுகள் ஆகியவற்றை தூண்டியது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது. மாறுதல்கள் கொண்ட இந்த புதிய தொழில்நுட்பமானது, வயதான மற்றும் சிசு நிலையில் உள்ள மக்காக் குரங்குகள் ஆகிய இரண்டு வகையான குரங்குகளின் உடலில் இருந்து சேகரிக்கப்பட்ட உயிரணுக்கள் மூலம் பரிசோதிக்கப்பட்டது.

வயதான குரங்குகளின் உயிரணுக்களில் இருந்து உயிருள்ள இரண்டு குரங்குகள் உருவாயின என்றாலும், இரண்டுமே பிறப்புக்குப் பின்னர் நீண்ட நாட்கள் உயிரோடு இருக்கவில்லை என்றும், இவற்றில் ஒன்றின் உடல் சரியாக வளரவில்லை என்றும் இந்த ஆய்வில் தெரியவந்தது. ஆனால், சிசு நிலையில் உள்ள குரங்கின் உயிரணுக்களில் இருந்து சுமார் 79 கருக்கள் 21 வாடகைத் தாய் குரங்குகளின் வயிற்றில் பொருத்தப்பட்டன. அவற்றில் 6 வாடகைத் தாய் குரங்குகள் கர்ப்பமடைந்தன என்றாலும், சாங் சாங் மற்றும் ஹுவா ஹுவா ஆகிய இரண்டு குரங்குக் குட்டிகள் மட்டுமே உயிரோடு பிறந்தன என்று கூறப்படுகிறது.

ஆக மொத்தத்தில், தற்போது மக்காக் வகை குரங்குகளில் வெற்றி வாகை சூடியுள்ள இந்த புதிய குளோனிங் தொழில்நுட்பம் மூலம் அல்செய்மர்ஸ், பார்கின்சன்ஸ் அல்லது புற்றுநோய் போன்ற நோய்களுடன் தொடர்புடைய மக்காக் குரங்குகளை குளோனிங் செய்து அவற்றை அந்த நோய்களுக்கான மருந்துகள் அல்லது சிகிச்சைகளை உருவாக்கப் பயன்படுத்த முடியும் என்கின்றனர் சீன ஆய்வாளர்கள்.

மனிதர்களை குளோனிங் செய்வது உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் இது சட்டப்படி குற்றம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மனித குளோனிங் நடக்க இப்போதைக்கு வாய்ப்பில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Next Story